மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பும் விப்ரோ ஊழியர்கள்..

விப்ரோ நிறுவனம் 18 மாதங்களுக்கு பிறகு ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய அழைத்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம் ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலால் 2020 ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதுமுதல் பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தனர். கிட்டதட்ட ஒன்றரை வருடம் கடந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் ஒரளவு கட்டுக்குள் உள்ள்து.

இதனையடுத்து பல நிறுவனங்கள் நூறு சதவீத ஊழியர்களுடன் செயல்பட அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் பலரும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் விப்ரோ நிறுவனமும் தனது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது.

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் தங்களது நிறுவனத்தில் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களில் 55% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அலுவலகத்தில் வெப்பநிலை பரிசோதனை, ஸ்கேன் கருவிகள் ஆகியவை உள்ளதாகவும், ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பணிபுரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பெறுந்தொற்று ஏற்பட்ட போது உலக அளவில் மூன்று சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே அலுவலகத்தில் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்துள்ளது. அதனால் மீண்டும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு திரும்பி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட போதும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொண்டதாகவும், அவர்களுக்கு சிறந்த முறையில் சேவைகள் வழங்கியதாகவும் பிரேம்ஜி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.