தேயிலை மூலம் கடனை அடைக்கும் இலங்கை.. அமெரிக்காவின் பொருளாதார தடையில் இருந்து தப்புமா..?
இலங்கை ஈரானுக்கான எண்ணெய் இறக்குமதி நிலுவை தொகையில் 251 மில்லியன் டாலர்களை தேயிலை பண்டமாற்று முறை மூலம் தீர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் செவ்வாய் அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எண்ணெய் கொள்முதலுக்கான கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான தேயிலையை அனுப்ப உள்ளதாகவும், ஜனவரி முதல் ஈரானுக்கு தேயிலையை அனுப்புவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சுமார் 4.5 பில்லியன் டாலர் கடனை திருப்பு செலுத்த வேண்டியுள்ள நிலையில், நவம்பர் மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 1.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இருப்பினும் 2022ல் அனைத்து கடனையும் தடையின்றி செலுத்த முடியும் என்பதில் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தொடர்ச்சியான உறுதிமொழிகள் இருந்த போதிலும் கடனை திருப்பி செலுத்தும் அபாயம் அதிகரித்துள்ளதால் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை CCC யில் இருந்து CC ஆக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தரமிறக்கியுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிறுப்பு ஆகஸ்டு மாதத்தில் இருந்து 2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் 1.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இலங்கை 6.9 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை எதிர்கொள்ளும் என பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திடம் 250.9 மில்லியன் டாலர் கடன் வைத்துள்ளது.
வெளிநாட்டு கடனை தீர்ப்பதற்காக பண்டமாற்று முறையில் இலங்கை தேயிலையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஈரான் உடனான இந்த பண்டமாற்று முறை ஐ.நா மற்றும் அமெரிக்க தடைகளை மீறாது. ஏனெனில், தேயிலை ‘மனிதாபிமான அடிப்படையில்’ ஒரு உணவு பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட எந்த ஈரானிய வங்கியும் இதில் ஈடுபடாது.
Also Read: இந்தியாவில் அமைகிறது TSMC நிறுவனத்தின் சிப் உற்பத்தி ஆலை..? தைவானுடன் பேச்சுவார்த்தை..
இலங்கை ஒவ்வொரு வருடமும் சுமார் 340 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்கிறது. கடந்த ஆண்டு இலங்கை 265.5 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்து 1.24 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி அந்நிய செலாவணியை உயர்த்தும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இருப்பினும் இலங்கை சமீபத்தில் இயற்கை உரத்திற்கு மாறியதால் செயற்கை உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், கூறிய படி இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்யுமா என தெரியவில்லை. மேலும் கொரோனாவினால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் அடிவாங்கியுள்ளது.