குலசேகரபட்டினத்தில் ஏன் இரண்டாவது விண்வெளி தளத்தை அமைக்கிறது மத்திய அரசு..?

விண்வெளி திட்டத்திற்காக நாட்டின் இரண்டாவது விண்வெளி தளத்தை மத்திய அரசு தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கி வருகிறது. இந்தியாவின் இரண்டாவது விண்வெளி தளத்தை அமைப்பதற்கான 2,350 ஏக்கர் நிலப்பரப்பில் 83 சதவீதம் அல்லது 1,950 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மேல்சபையில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், தமிழக அரசின் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இரண்டாவது விண்வெளி தளம் நிறைவடைந்ததும் வசதிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான மனிதவள தேவை மதிப்பிடப்படும் என சிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டாவது விண்வெளி நிலையம் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுக்குள் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் ஒரே விண்வெளி நிலையமான ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் இரண்டு ஏவுதளங்களுடன் விண்வெளி நிலையம் இயக்கப்பட்டு வருகிறது.

ஶ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்த விண்வெளி நிலையம் 1971 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 1993 முதல் இங்கு PSLV, அதன் பிறகு GSLV மற்றும் GSLV Mk3 ஆகிய ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு இந்த ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் நினைவாக சதீஷ் தவான் விண்வெளி மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்த விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியின் மேற்கு-கிழக்கு சுழற்சியின் கூடுதல் வேகத்தால் பயனளிக்கின்றன. ஶ்ரீஹரிகோட்டாவில் கடலுக்கு அருகில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுவதால் அவை கடலுக்கு மேலே பறக்கின்றன. விபத்துகளின் போது ராக்கெட்டும் அதன் குப்பைகளும் கடலில் மட்டுமே விழும். ஶ்ரீஹரிகோட்டா கனமான ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், சிறிய செயற்கைகோள்களை ஏவும் போது சவாலாக இருக்கிறது.

மேலும் ராக்கெட் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து தென்துருவத்தை நோக்கி பயணிக்கும் போது, இலங்கையை தாண்டி போக வேண்டும். இதனால் ஆபத்தை தவிர்ப்பதற்காக ராக்கெட் நேர்கோட்டில் பயணிப்பதற்கு பதிலாக இலங்கை மேல் செல்லாமல் இருக்க ஒரு வளைந்த பாதையில் செல்கிறது. இதனால் ராக்கெட் கூடுதல் எரிபொருளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பெரிய ராக்கெட்டுகள் அதன் பேலோட் சுமக்கும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க எரிபொருளை எரித்தாலும், SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகள் அதிக எரிபொருளை இழக்க நேரிடுகிறது.

எனவே இலங்கையை பாதிக்காமலும் அதேநேரம் நேர்கோட்டில் செல்லும் வகையிலும் மத்திய அரசு ஒரு இடத்தை நீண்ட காலமாக தேடி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் தூத்துகுடி மாவட்டத்தில் அமைந்துள்ள குலசேகரபட்டினம் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்து ஸ்டார்ட் அப்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் எரிபொருளை சேமிக்கவும், துருவத்தை நோக்கி நேர்கோட்டில் செல்லவும் அனுமதிக்க முடியும்.

பெரிய ராக்கெட்டுடன் ஒப்பிடுகையில் சிறிய ராக்கெட்டுகள் குறைந்த நேரத்துடன் கட்டமைக்கவும், அசெம்பிள் செய்யவும், ஏவவும் எளிதாக இருப்பதால், சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு இந்தியா ஒரு பிரத்யோக ராக்கெட் ஏவுதளத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதன் மூலம் சிறிய ராகெட்டுகளை குறைந்த செலவில் ஏவுவதற்கான முக்கிய நிலையமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்தியா சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.