வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல: வி.கே.சிங்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங் வன்முறையில் ஈடுபடும் எவரும் இராணுவத்திற்கு தகுதியானவர் அல்ல என தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மற்றும் வடமாநிலத்தில் உள்ள இளைஞர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போராட்டகாரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர்.

பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சரும் முன்னாள் இந்திய இராணுவ தளபதியுமான ஜெனரல் வி கே சிங், இளைஞர்களால் காட்டப்படும் இத்தகைய நடத்தை இராணுவத்திற்கு ஏற்றது அல்ல என தெரிவித்துள்ளார். பீகாரில் பரவிய வன்முறைக்கு சிங் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைகாட்சிக்கு சிங் அளித்த பேட்டியில், இப்படி வன்முறையில் ஈடுபடும் எவரும் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கவில்லை, நான் தலைமை பொறுப்பில் இருந்தால், அவர்களில் யாரையும் நான் இராணுவத்திற்கு எடுக்க மாட்டேன். யாரேனும் இராணுவத்திற்கு வர விரும்பினால், இராணுவத்தின் மீது உணர்வு இருந்தால், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என சிங் தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதாக சுட்டிகாட்டிய சிங், உத்திர பிரதேசம், ஹரியானா மாநில முதல்வர்கள், பாதுகாப்பு படைகளில் 4 ஆண்டு காலம் முடிந்த அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதேபோல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநில காவல்துறை ஆட்சேர்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பத்தை போக்க பீகார் அரசும் இந்த நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சிங் தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகனாபாத்தில் உள்ள இளைஞர்கள் நாசவேலை மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சப்ராவில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு இளைஞர்கள் தீ வைத்த நிலையில் போராட்டம் வன்முறையாக மாறியது.

ஜெகனாபாத், சாப்ரா தவிர புலந்த்ஷாஹர், அர்ரா, பக்சர் மற்றும் சஹர்சா மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த அக்னிபாத் திட்டம் என்பது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தலைவர்களுடன் இணைந்து இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்காக கொண்டுவந்த திட்டமாகும்.

அக்னிவீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் 30,000 முதல் 40,000 வரை சம்பளம் மற்றும் 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதி தொகுப்பாக 11.71 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 17 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் சேரலாம். ஆண்டுக்கு 45,000 இளைஞர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 6 மாதங்கள் பயிற்சியும், 3.5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

4 ஆண்டு பணி காலம் முடிந்ததும் 25 சதவீத அக்னி வீரர்கள் நிரந்தர பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மற்ற 75 சதவீத வீரர்களுக்கு சேவா நிதி 11.71 லட்சம் ரூபாய், திறன் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் ஆகியவை ஏற்பாடு செய்து தரப்படும். இந்த திட்டம் இராணுவத்தில் சேர விரும்புவோருக்கு கூடுதல் விருப்பமாக மட்டுமே இருக்கும். அதேவேளையில் பாரம்பரிய இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்திற்கு இந்த அக்னிபாத் திட்டம் தடையாக இருக்காது.

Leave a Reply

Your email address will not be published.