காங்கோவில் வன்முறை: ஐ.நா அமைதி படையை சேர்ந்த 2 இந்திய BSF வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு..

காங்கோ ஜனநாயக குடியரசில் நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த 2 BSF அதிகாரிகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் உறுதிபடுத்தல் பணி (MONUSCO) அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இரண்டு வீரம் மிக்க இந்திய அமைதி காக்கும் படையினரை இழந்துள்ளோம். அவர்கள் MONUSCO வின் ஒரு பகுதியாக இருந்தனர்.

இந்த மோசமான தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். BSF அறிக்கையின்படி, நேற்று காங்கோவின் புட்டெம்போவில் இந்த போராட்டம் நடந்துள்ளது. அவர்கள் MONUSCO எனப்படும் ஐ.நா பாதுகாப்பு படையினரை வெறியேறகோரி போராட்டங்களை நடத்தினர்.

கோமா நகரத்தில் பெனி மற்றும் புடெம்போ ஆகிய இரண்டு இடங்களில் MONUSCO தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் ஜூன் 2 ஆம் தேதி தான் இரண்டு BSF படைபிரிவுகள் நிறுத்தப்பட்டன. இந்த இரண்டு படைப்பிரிவில் சுமார் 60 முதல் 70 வீரர்கள் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புடெம்போவில் உள்ள முகாம்மை 500க்கும் மேற்பட்ட போராட்டகாரர்கள் சூழ்ந்தனர்.

காங்கோ காவல்துறை மற்றும் இராணுவத்தால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் போராட்டகாரர்கள் கல்வீசி தாக்கினர். பின்னர் ஐ.நா பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாகியால் சுட்டதால் போராட்டகாரர்கள் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் போராட்டகாரர்கள் குவியத் தொடங்கினர்.

இந்த முறை போராட்டகாரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். மொராக்கோ மற்றும் இந்திய துருப்புகள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு BSF வீரர்கள் உட்பட 15 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

போராட்டகாரர்களை கையாள்வதில் தனது படைகள் நிதானத்தை கடைப்பிடித்ததாக MONUSCO கூறியுள்ளது. போராட்டகாரர்களின் கூட்டத்தின் தேச விரோத சக்திகள் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், இது நடந்திருக்க கூடாத ஒன்று, இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

மேலும் சக ஊழியர்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம். குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். இதற்காக நிச்சியமாக இந்திய அரசாங்கத்திற்கும் எங்கள் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த அமைதி காக்கும் படையினர் பற்றிய இந்திய தூதரகத்துடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.