ஹர்ஷா கொலை குற்றவாளிகள் சிறையில் மொபைல் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.. போலிசார் விசாரணை..
பஜ்ரங் தள் தொண்டர் ஹர்ஷா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சிறப்பு சிகிச்சை பெறுவதை காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான ஹர்ஷா, கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனையின் போது பிப்ரவரி 20 அன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை அப்போது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பெங்களுர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சிறையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொபைல் போன்களில் பேசுவதும், வீடியோ கால் செய்யும் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து, குற்றவாளிகளுக்கு சிறைக்குள் மொபைல் போன்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சாட்சியங்களை அழிக்க அல்லது விசாரணையை தடம்புரள செய்ய ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது தொடர்பாக ஹர்ஷா குடும்பத்தினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தங்களது வருத்தத்தை தெரிவித்து உள்ளனர். ஹர்ஷாவின் சகோதரி ரஜினி கூறுகையில், அரசாங்க அமைப்பு குறைபாடு உடையது, மனிதாபிமானம் இல்லை, ஒரு உயிர் பறிபோனது, நீதி வழங்க யாருக்கும் அர்பணிப்பு இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை, விசாரணை நடந்து வந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் எப்படி பேசுகிறார்கள் என்பதை பாருங்கள். அவர்களுக்கு எல்லா ஆதரவும் உளளது. நாங்கள் எங்கள் சகோதரனை இழந்து தவிக்கிறோம்.
சிறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை தவறான முன்னுதாரணமாகி இளைஞர்களை தவறான பாதையில் செல்ல தூண்டும். கொலை செய்த பிறகும் சகல ஆடம்பரங்களையும் அனுபவித்து விட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு வெளியே வர முடியும் என எண்ணத்தை உருவாக்கும் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஹர்ஷாவின் தாயார் பத்மா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிறைக்குள் இதுபோன்ற ஆடம்பரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கம் அவர்களை விடுவிக்க கூடும் என்று கூறினார். எங்களுக்கு நீதி மறுக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம் என ஹர்ஷாவின் தாயார் தெரிவித்துள்ளார். சிறையில் செல்போன் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.