ISIS தலைவனை போட்டு தள்ளிய அமெரிக்க இராணுவம்.. அதிபர் பிடன் அறிவிப்பு..

சிரியாவின் வடமேற்கு இட்லிப் மகாணத்தில் நேற்று இரவு அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

சிரியாவின் வடமேற்கே துருக்கி எல்லைக்கு அருகில் அட்மே பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அமெரிக்காவின் சிறப்பு படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அப்போது இந்த தாக்குதலில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரைஷி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரைஷி, அவனது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட் 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 குழந்தைகள், 4 பெண்கள் அடங்குவர். ISIS மீண்டும் எழுச்சி பெற முயற்சித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட அறிக்கையில் பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, சிரியாவில் தாக்குதல் நடத்தியதை உறுதிபடுத்தினார். இதனை தொடர்ந்து அதிபர் பிடனின் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையில் இஸ்லாமிய அரசு குழுவின் தலைவர் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளால் போர்களத்தில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு எனது வழிகாட்டுதலின்படி, சிரியாவின் வடமேற்கில் அமெரிக்க இராணுவம் அமெரிக்க மக்களையும் எங்கள் கூட்டாளிகளையும் பாதுகாப்பாகவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.

எங்கள் இராணுவ வீரர்களின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி, நாங்கள் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரைஷியை கொன்றுவிட்டோம். அனைத்து அமெரிக்கர்களும் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர் என அதிபர் பிடன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியை கொன்ற சில நாட்களுக்கு பிறகு அக்டோபர் 31, 2019 அன்று ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஷிமி அல் குரைஷி பொறுப்பேற்ற நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.