உதய்பூர் கன்ஹையா கொலை குற்றவாளிகள் பாஜகவில் இணைய முயற்சி..?
உதய்பூரில் கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவன் 3 ஆண்டுகளாக பாஜகவில் இணைய முயற்சித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், குற்றவாளிகள் குறைந்தது மூன்று வருடங்களாக பாஜகவின் ராஜஸ்தான பிரிவுக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதண்டு கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அட்டாரி. அவருக்கு தெரிந்த நபர் மூலம் பாஜகவில் இணைய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள பாஜகவின் சிறுபான்மை மோர்ச்சா உறுப்பினர் இர்ஷாத் செயின்வாலா, 2019 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு ஹச் புனித யாத்திரை சென்று திரும்பிய ரியாஸை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக செயின்வாலாவிடம் கேட்டபோது, ரியாஸ் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் ரியாஸ் தனிப்பட்ட முறையில் பாஜக சித்தாந்தத்தை விமர்சித்தே வந்ததாக செயின்வாலா கூறியுள்ளார். ரியாஸ் அடிக்கடி பாஜக நிகழ்வுகளில் அழைக்கப்படாமல் வருவார். பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா உடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் யாரும் அவரை அழைக்கவில்லை.
அவர் தானாகவே வருவார், கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். ஆனால் தனிப்பட்ட முறையில் பாஜகவை கடுமையாக விமர்சிப்பார் என செயின்வாலா கூறியுள்ளார். குற்றவாளியான ரியாஸ் அட்டாரி பாஜக நிகழ்ச்சிகளில் முகமது தாஹிர் என்ற நபர் மூலம் நுழைந்துள்ளார். முகமது தாஹிர் ஒரு உறுப்பினர் என செயின்வாலா குறிப்பிட்டார்.
தாஹிர், ரியாஸுடன் நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில் தாஹிரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் வீட்டில் இல்லை. வாடகை வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ரியாஸ் தனது பைக்கிற்கு 2611 என்ற எண்ணை வாங்க 5000 ரூபாய் செலுத்தியது தெரியவந்தது. கடந்த மாதம் 28 ஆம் தேதி கன்ஹையா லாலை கொலை செய்து விட்டு இருவரும் இந்த எண் பைக்கில் தான் தப்பி சென்றுள்ளனர். இந்த 2611 என்ற எண் 26 ஆம் தேதியையும், 11 வது மாதத்தையும் குறிக்கிறது.
அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு 11 வது மாதம் 26 ஆம் தேதி, அஜ்மல் கசாப் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் இறந்தனர்.
2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தேதி மற்றும் மாதம் ரியாஸ் வாங்கிய பைக் எண்ணுடன் ஒத்துபோகிறது. பாஜகவில் இணைந்து இந்த கொலைக்கு காவி சாயம் பூச ரியாஸ் முனைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.