பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு சீக்கியர்கள்..
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள சர்பந்த் பகுதியில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த இருவரை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர், இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா புறநகர் பகுதியில் அமைந்துள்ள சர்பந்த் பகுதியில் உள்ள படா தாஸ் பஜாரில் இரண்டு சீக்கியர்களும் கடையில் மசாலா விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் சுட்டதில், சல்ஜீத் சிங்(42) மற்றும் ரஞ்சித் சிங்(38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்க்வா முதல்வர் மஹ்முத் கான் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவம் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு எதிரான சதி என்று கூறிய முதல்வர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
பெஷாவரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வணிகம் மற்றும் மருந்து கடைகளை நடத்தி வருகின்றனர். எட்டு மாதங்களுக்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில், பெஷாவரில் நன்கு அறியப்பட்ட சீக்கிய யுனானி மருத்துவ பயிற்சியாளர் அவரது கிளினிக்கில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Also Read: பொருளாதார நெருக்கடியால் 1 மில்லியன் அகதிகளை திருப்பி அனுப்பும் துருக்கி..?
2020 ஆம் ஆண்டு சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவ் பிறந்த லாகூரில் உள்ள குருத்வாரா நங்கனா சாஹிப்பை மர்ம கும்பல் தாக்கிய ஒரு நாள் கழித்து, ரவீந்தர் சிங் என்ற செய்தி சேனல் தொகுப்பாளர் பெஷாவரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் சரண்ஜித் சிங் என்ற சீக்கிய சமூகத்தின் முக்கிய நபர் பெஷாவரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Also Read: கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியாவின் முடிவை விமர்சித்த ஜி7 நாடுகள்..
2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தேசிய சட்டமன்ற உறுப்பினர் சோரன் சிங்கும் பெஷாவரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சீக்கிய சமூகத்தினர் பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது அச்சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் பாகிஸ்தானில் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். கிறிஸ்துவர்கள் இரண்டாவது மத சிறுபான்மையினராக உள்ளனர்.