ஜம்மு காஷ்மீரில் LeT/TRF அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

ஜம்மு காஷ்மீரின் சகுரா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கி சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் எதிர்ப்பு முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் சகுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நேற்று இரவு அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பதிலுக்கு இராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் எதிர்ப்பு முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் இக்லாக் ஹஜாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹசன்போராவில் தலைமை காவலர் அலி முகம்மது கனி கொல்லப்பட்ட வழக்கில் தற்போது கொல்லப்பட்ட இந்த இக்லாக் ஹஜாம் தொடர்புடையவன் என காஷ்மீர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

குல்காம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த முகம்மது கனி, ஜனவரி 29 அன்று அனந்த்நாக் பிஜ்பெஹாராவில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகே பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே அலி உயிரிழந்தார்.

தற்போது காவலர் அலி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இக்லாக் ஹஜாம் என்ற பயங்கரவாதியை இன்று அதிகாலை சுட்டுக்கொன்றதாக காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.