ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர நிலநடுக்கம்.. 22 பேர் பலி..
திங்கள் மதியம் ஆப்கானிஸ்தானின் மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்து இருக்கலாம் என உள்ளுர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக பட்கிஸ் மாகாண கலாச்சாரம் மற்றும் தகவல் துறையின் தலைவர் பாஸ் முகமது சர்வாரி தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, முதலாவது நிலநடுக்கம் மதியம் 2 மணி அளவில் 5.3 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவிலும் ஏற்பட்டுள்ளது.
பட்கிஸ் மாகாணத்தின் தலைநகரான கலா-இ-நாவின் கிழக்கே 41 கிலோமீட்டர் தொலைவிலும், இரண்டாவது நிலநடுக்கம் தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்ததாக சர்வாரி கூறியுள்ளார்.
சர்வாரின் கூற்றுப்படி, துர்க்மெனிஸ்தானின் எல்லையில் ஆப்கானிஸ்தானின் தெற்கு முனையில் உள்ள காடிஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் முகூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. காடிஸ் மாவட்டத்தில் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
Also Read: ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆளில்லா ட்ரோன் தாக்குதல்.. 2 இந்தியர்கள் உயிரிழப்பு..
நிலநடுக்கம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாகவும், நேற்று சில கிராமங்களில் மட்டுமே பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக தாலிபான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இன்று மீட்பு குழுக்களை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொலை.. பெண்கள், பள்ளிக்குழந்தைகள் கடத்தல்..
பட்கிஸ் மாகாணம் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வாரி கூறியுள்ளார். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய சேதங்கள் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார். மிக ஏழ்மை மாநிலமான பட்கிஸ் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.