மேற்குவங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது விபத்து.. உயிரிழந்த திரிணாமுல் கட்சி தலைவர்..

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 4 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் டோக்லாம் வார்டு எண் 3ல் உள்ள பாகர்பூர் ராம்னாவின் மண்டல்பாரா பகுதியில் வயல்வெளியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டுவெடிப்பில் 28 வயதான சிராஜுல் ஷேக் என்ற நபர் உயிரிழந்தார். இவர் அப்பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் என தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 3 பேரில் ஒருவரான நஜ்புல் ஷேக் தனது இரண்டு கையையும் இழந்தார். காயமடைந்த 3 பேரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிராஜுல் ஷேக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடம் வங்கதேச எல்லையை ஒட்டி உள்ளது. உயிரிழந்த சிராஜுல் தந்தை கூறுகையில், வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக அவருக்கு பெரும் தொகை வழங்கப்பட்டது, நாங்கள் அவரை தடுத்தோம் ஆனால் அவர் கேட்கவில்லை.

எனது மகன் ஒரு விவசாயி, நிலம் தொடர்பாக தொடர்ந்து தகராறு இருந்து வந்தது. அன்று மாலை எனது மகன் வெடிகுண்டு தயாரிக்கும் போது இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் எங்களுக்கு தெரிவித்தனர் என கூறியுள்ளார். திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இது தனிப்பட்ட குடும்ப விவகாரம், இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

வயலில் வெடிகுண்டு எதற்காக தயாரிக்கப்பட்டது, இந்த குண்டுகள் எங்கு பயன்படுத்தப்பட உள்ளன, இதற்கு பின்னால் வேறு யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை கண்டறிய போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் பல டிபன் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் உள்ள இந்த முர்ஷிதாபாத் வெடிகுண்டுகளுக்கு பெயர் போன இடம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் பிர்பூம் மாவட்டத்தின் நல்ஹாட்டி பகுதியில் மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினரால் 81,000 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அதே பகுதியில் இருந்து சில நாட்களுக்கு பிறகு 28,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றினர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.