டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. கடிதம் எழுதிய ராகுல்காந்தி..
இந்தியாவில் பேச்சு சுதந்திரத்தை தடுப்பதில் டிவிட்டர் மத்திய அரசுக்கு உடந்தையாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். கடந்த மாதம் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாரக் அகர்வாலுக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டிசம்பர் 27 ஆம் தேதி டிவிட்டருக்கு எழுதிய கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஆகியோருடன் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கின் தரவுகளை ஒப்பிட்டு பார்த்த போது, ராகுல் காந்தியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜிய நிலையை அடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும், ஆகஸ்டு மாதம் முதல் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் மற்ற அரசியல்வாதிகள் தங்களது பயனர்களை தக்கவைத்து கொண்டுள்ளனர்.
ராகுல் காந்தி 2021 ஜனவரி முதல் ஒரு மாதத்திற்கு 2.3 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்களை பெற்றுவந்ததாகவும், ஆகஸ்டு மாதம் முதல் இந்த எண்ணிக்கை 2,500க்கும் குறைவாக சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ராகுல் காந்தியை 19.5 மில்லியன் பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லியில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் படத்தை டிவீட் செய்து ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் விதிமுறைகளை மீறியதாக கூறி ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் நிறுவனம் 8 நாட்களுக்கு முடக்கியது.
அதுமுதல் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. டிவிட்டர் இந்தியாவில் உள்ளவர்கள் எனது குரலை அடக்குவதற்கு அரசாங்கத்தின் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவின் எண்ணத்தை அழிப்பதில் டிவிட்டர் ஒரு சிப்பாயாக மாற அனுமதிக்க கூடாது என ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் சார்பாக நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன் என் கூறப்பட்டுள்ளது.