குழந்தைகள் கண் முன்னே மனைவியை அடித்து கொலை செய்த காதல் கணவன்

திருச்சி தில்லைநகரில் வசித்து வருபவர் தவசீலன் (27), புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி ( 22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சில நாட்களாக ராஜேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த தவசீலன், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று குடிபோதையில், மனைவி ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் தவசீலன். இவர்கள் இருவரையும் ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா சமாதானப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை துணி துவைப்பதற்காக வெளியே வந்த சகுந்தலா தனது சகோதரி வீட்டில் இருந்து அதிக சத்தத்துடன் பாடல் ஒலிப்பதை கவனித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்து சகோதரியின் வீட்டை திறந்து பார்த்த பொழுது ரத்தம் வெள்ளத்தில் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார். பிள்ளைகள் இருவரும் தாயின் உடல் அருகே அழுதபடி நின்று கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா தில்லை நகர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜேஸ்வரி மகன் சாய் பிரசாதிடம் போலிசார் விசாரித்தபோது, தனது தாயை தந்தை கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்து கொன்றதாக கூறியுள்ளான்.

இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தவசீலனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *