இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதி 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..?

1999 ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி பாகிஸ்தானின் கராய்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதியின் உண்மையான பெயரை வெளியிடாமல் தொழிலதிபர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 1999, டிசம்பர் 24 அன்று இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம் நேபாளத்தில் இருந்து ஹர்கத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. டெல்லியை அடைய வேண்டிய விமானம் லாகூர், அமிர்தசரஸ் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் பறந்து கடைசியாக அப்போது தாலிபான்கள் ஆட்சி செய்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் தரையிறங்கியது.

கடத்தப்பட்ட விமானத்தில் 178 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் பணைய கைதிகளாக வைக்கப்பட்டனர். பயணிகளை விடுவிக்க வேண்டுமென்றால் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளான மசூத் அசார், அகமது ஓமர் சயீத் ஷேக், முஷ்டாக் அகமது சர்கார் உள்ளிட்ட 35 பேரை விடுவிக்க வேண்டும் என பயங்கரவாதிகள் கூறினர்.

தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள அஜித் தோவல் குழு மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு டிசம்பர் 31, 1999 அன்று 177 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகள் தாக்கியதில் 1 பயணி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த விமான கடத்தலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவனான ஜாகூர் மிஸ்திரி பாகிஸ்தானின் கராய்ச்சியில் ஜாஹித் அகுண்ட் என்ற பெயரில் வாழ்ந்து வந்துள்ளான். விமான கடத்தலுக்கு பிறகு தலைமறைவான ஜாகூர் மிஸ்திரியை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ரகசிய இடத்தில் மறைத்து வைத்து இருப்பதாக கூறப்பட்டது.

ஜாகூர் மிஸ்திரி கராய்ச்சியில் உள்ள அக்தர் காலனியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்துள்ளான். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து ஜாகூர் மிஸ்திரி கொலை செய்துவிட்டு தப்பி ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பாகிஸ்தான் ஊடகங்கள் ஜாகூர் மிஸ்திரி என்ற உண்மையான பெயரை குறிப்பிடாமல் தொழிலதிபர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. ஜாகூர் மிஸ்திரியை கொலை செய்தது யார் என்ற விவரம் வெளியாகவில்லை..

Leave a Reply

Your email address will not be published.