நாட்டை நடத்துவதற்கு அரசிடம் போதுமான நிதி இல்லை.. மாநாட்டில் குமுறிய இம்ரான்கான்..

இஸ்லாமாபாத்தில் செவ்வாயன்று நடந்த சர்க்கரை தொழிலுக்கான பெடரல் பியூரோ ஆஃப் ரெவென்யூவின் (FBR) ட்ராக் அண்ட் ட்ரேஸ் சிஸ்டம் (TTS) தொடக்க விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மக்களுக்காக செலவிட பாகிஸ்தான் அரசிடம் போதிய நிதி இல்லை என தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு கடன்கள் மற்றும் குறைவான வரி வசூல் ஆகியவை தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக மாறியுள்ளது. எங்கள் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால் நாட்டை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை. அதனால் வெளிநாட்டு கடன் வாங்க வேண்டி உள்ளது.

மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்காததால் வரி செலுத்த அவர்கள் விரும்பவில்லை. வரி செலுத்தாத கலாச்சாரம் நாட்டில் அதிகரித்து வருகிறது. உள்ளூர் வளங்களை உருவாக்க தவறியதே தற்கு காரணம். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தனது அரசாங்கம் 3.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு கடனை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டதுடன் ஒப்பிடுகையில் கடன் வாங்குவது 580 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது அல்லது 18 சதவீதம் அதிகமாக இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்தார். மேலும் முந்தைய அரசாங்கங்களை விமர்சித்த கான் 2009 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் அதிக அளவில் வெளிநாட்டு கடன் வாங்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

FBR வரி வசூலை அதிகரிப்பதன் மூலம் இந்த ஆண்டு 8 டிரில்லியன் ரூபாய் வரி வசூலை இலக்காக கொண்டுள்ளதாக கான் கூறினார். வரி வசூலை அதிகரிக்கவும், வெளிநாட்டு கடனை தவிர்க்கவும் எரிபொருள் விலையை உயர்த்த மக்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் உடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது. எனவே அதன் விலையை உயர்த்துவதன் மூலம் வரி வருவாயை அதிகரிக்க முடியும் என கான் கூறினார். மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2021-2023 ஆம் ஆண்டில் நாட்டிற்கு 51.6 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நிதி தேவைப்படுவதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.

Also Read: பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம்.. பின்னடைவில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..

பாகிஸ்தான் அரசின் நிதி ஆலோசகர் ஷௌகத் தார் கூறுகையில், பாகிஸ்தானில் 220 மில்லியன் மக்கள் தொகையில் வெறும் 3 மில்லியன் மக்கள் மட்டுமே முறையாக வரி செலுத்தி வருவதாக கூறினார். பயங்கரவாத அமைப்பிற்கு நிதி அளித்தல், ஆதரித்தல் ஆகிய காரணங்களுக்காக பாகிஸ்தான் தற்போது FATFல் சாம்பல் நிற பட்டியலில் உள்ளது.

Also Read: சீனாவை தாக்கிய குட்டி யானை.. இந்தியா தான் காரணம் என சீனா கதறல்..

மேலும் பாகிஸ்தான் சீனாவின் CPEC திட்டமும் பலனளிக்காததால் மிகப்பெரிய சிக்கலில் பாகிஸ்தான் உள்ளது. சமீபத்தில் கைபர் பக்துன்க்வாவில் பேருந்தில் சென்று கொண்டிருந்த சீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 சீன பொறியாளர்கள் மரணம் அடைந்தனர். உலக வங்கி, IMF உட்பட எங்கும் பாகிஸ்தானுக்கு நிதி கிடைக்கவில்லை. அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கூடிய விரைவில் திவால் நிலைமைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.

Also Read: குடும்பத்தை வாழ வைக்க 9 வயது மகளை விற்பனை செய்த தந்தை.. ஆப்கனில் அதிர்ச்சி..

Leave a Reply

Your email address will not be published.