ஆப்ரிக்காவில் முடிவுக்கு வரும் டாலர்.. டாலருக்கு மாற்றாக தங்க நாணயத்தை வெளியிட்ட ஜிம்பாப்வே..

ஜிம்பாப்வே கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து அதிக பணவீக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அதன் வருடாந்திர பணவீக்க விகிதம் 192 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்தில் உயர்ந்த அதிகப்பட்ச உயர்வாகும். இதனால் நாட்டில் உணவு விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

டாலருக்கு எதிரான அதன் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜிம்பாப்வேயின் அதிக பணவீக்கம், நாணயத்தின் வீழ்ச்சி, வேலையின்மை, உற்பத்தி வீழ்ச்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜிம்பாப்வே பொதுமக்களுக்கு விற்க தங்க நாணயத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை நாட்டின் மத்திய வங்கியான ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி திங்கள் அன்று அறிமுகம் செய்தது. ரிசர்வ் வங்கி திங்கள் அன்று வர்த்தக வங்கிகளுக்கு 2,000 நாணயங்களை வழங்கியது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் வங்கிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கலாம். உள்ளுர் நாணயம் அல்லது வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தி வங்கிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களிடம் இருந்து மக்கள் தங்க நாணயங்களை வாங்கலாம்.

வாங்குபவர்கள் தங்க நாணயங்களை வங்கியில் வைத்திருக்கவோ அல்லது வீட்டிற்கோ எடுத்து செல்லலாம். வெளிநாட்டவர்கள் நாணயங்களை வெளிநாட்டு நாணயங்களில் மட்டுமே தங்க நாணயங்களை வாங்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த தங்க நாணயத்திற்கு உள்ளுர் டோங்கா மொழியில் விக்டோரியா நீர்வீழ்ச்சியை குறிக்கும் மோசி ஓ துன்யா என்ற பெயரில் அழைக்கப்படும்.

இந்த நாணயங்கள் எளிதில் பணமாக மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும். உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வர்த்தகம் செய்யப்படும். நாணயம் பரிவர்த்தனை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாணயங்களை வைத்திருப்பவர்கள் நாணயங்களை வாங்கிய நாளில் இருந்து 180 நாட்களுக்கு பிறகே அவற்றை பணமாக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 காரட் தூய்மையுடன் ஒரு டிராய் அவுன்ஸ் எடையுள்ள இந்த நாணயங்களை கடன்கள் மற்றும் கடன் வசதிகளுக்கான பிணையமாகவும் பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாணயங்களின் விலையானது ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கான சர்வதேச சந்தை விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். திங்கள் கிழமை வெளியிடப்பட்ட நேரத்தில் மோசி ஒ துன்யா நாணயத்தின் விலை 1,824 டாலராக இருந்தது.

ஜிம்பாப்வே கணிசமான தங்க இருப்பை கொண்டுள்ளது. பல நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புள்ளிவிவரங்களின்படி, 2020ல் 19 டன்னாக இருந்த தங்க உற்பத்தி 2021 ஆம் ஆண்டு சுமார் 30 டன்னாக உயர்ந்துள்ளது. இருப்பினும் நாட்டில் தங்க கடத்தல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி ஜிம்பாப்வேவில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் மத்திய வங்கிக்கு விற்கப்பட வேண்டும்.

ஆனால் பலர் அமெரிக்க டாலர்களில் பணம் பெறுவதற்காக தங்கத்தை வெளிநாட்டிற்கு கடத்துகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்க நாணயம் டாலருக்கு மாற்றாக வர்த்தகத்தில் ஈடுபட உதவும். மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என கூறப்பட்டுள்ளது. பல நாடுகள் டாலருக்கு மாற்றாக பல வழிகளை தேடி வரும் நிலையில் ஆப்ரிக்காவில் டாலர் விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.