பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்.. 4 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்..

கைபர் பக்துன்க்வாவின் வடக்க வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மிர் அலி பகுதியில் உள்ள ராணுவ வாகனத்தில் தற்கொலை படை தாக்குதலில் 4 பாகிஸ்தான் இராணுவ வீரரகள் கொல்லப்பட்ட நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு வஜிரிஸ்தானின் மிராலியில் இருந்து மாவட்ட தலைமையகமான மிரம்ஷாவுக்கு இராணுவ கான்வாய் சென்று கொண்டிருந்த போது பட்டாசி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி இராணுவ வாகனம் மீது மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளான்.

இந்த தாக்குதலில் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் 2 பேர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு போர் நிறுத்தம் அறிவித்துள்ளபோதும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே சமீபத்தில் மோதல் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் ஜூலை 4 அன்று வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். மே 30 அன்று ரஸ்மாக் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில் 2 வீரர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

மேலும் ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் கான்வாய் மீதான தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) ஆகியவை ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தான் சென்று விடுகின்றன.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் பயங்கரவாத தாக்குதல்களில் மொத்தம் 105 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 97 வீரர்கள் மற்றும் 8 இராணுவ அதிகாரிகள் ஆவர். நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுருத்தல் வேரறுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். நேற்று கொல்லப்பட்டவர்களில் லான்ஸ் நாயக் ஷாஜாய்ப் (22), லான்ஸ் நாயக் சஜ்ஜாத் (26), உமைர் (25) மற்றும் குர்ராம் (30) ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published.