காஷ்மீர் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை.. தீவிரவாதிகள் ஊடுருவ உருவாக்கப்பட்டதா?
காஷ்மீர் ஹிராநகர் செக்டாரின் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சர்வதேச எல்லையில் போமியான் கிராமத்தில் சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படை ரோந்து குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த சுரங்கப்பாதையின் நீளம் 150 மீட்டர் ஆக இருந்தது. சுரங்கப்பாதையின் மறுமுனை பாகி்ஸ்தான் பகுதியில் உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த தகவல் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜம்வாலுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு ஐ.ஜி.ஜாம்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்;
இந்த சுரங்கப்பாதை கடந்த 6 மாதங்களில் சம்பா, கதுவா மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 3வது சுரங்கப்பாதை ஆகும். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவதற்கு வசதியாக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் குறியீடு உள்ளதால், இதற்கு பாகிஸ்தான் அரசுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் மறுமுனை பாகிஸ்தானின் ஷாகேர்கர் பகுதி உள்ளது. அந்த பகுதி பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் பகுதி ஆகும். சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட மணல் மூட்டைகளில் தயாரிப்பு ஆண்டு 2016-2017 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சுரங்கப்பாத்ட் அப்போது கட்டப்பட்டதாக இருக்கலாம் என ஜாம்வால் கூறினார்.
இந்த சுரங்கப்பாதை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். சமீப காலமாக ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதால் தீவிரவாதிகள் ஊடுருவிக்க வாய்ப்பில்லை.
பயங்கரவாதிகளை இந்கியாவுக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் எப்போதும் காத்திருக்கிறது. ஆனால் அதனை நாங்கள் முறியடித்து வருகிறோம். பாகிஸ்தானின் ஊடுருவல்களை முறியடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஐ.ஜி. ஜம்வால் தெரிவித்துள்ளார்.