மின்தொகை பாக்கி வைத்துள்ள மாநிலங்களில் தமிழகம்.. நிலுவை தொகையை செலுத்த பிரதமர் வலியுறுத்தல்..

மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள நிலுவை தொகையை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மொத்த நிலுவை தொகை இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மின்சார அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்டதை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பல மாநிலங்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பதற்கு பதிலாக அவற்றை மறைக்க முயற்சி செய்கின்றன. மாநிலங்கள் இப்பிரச்சனையை எதிர்காலத்திற்கு நகர்த்த முயற்சிக்கின்றன. அவற்றை மேலும் மோசமாக்குகின்றன. இதுபோன்ற அணுகுமுறையால் பல மாநிலங்களில் மின்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது. ஒரு மாநிலத்தில் மின்துறை நலிவடையும் போது அது ஒட்டுமொத்த நாட்டின் மின் துறையையும் பாதித்து, அந்த மாநிலத்தின் எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறது.

விநியோக துறையில் ஏற்படும் இழப்புகள் இரட்டை இலக்கத்தில் உள்ளது. அது வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் மின்சார நிறுவங்களுக்கு நிதி நெருக்கடி இருப்பதாகவும், அதிக இழப்பை ஏற்படுத்தும் பழைய டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோக பாதைகளையே நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக நுகர்வோருக்கு மின்சாரத்தின் விலை உயர்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிறுவனங்கள் போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் நிலையில், செலுத்தப்படாத நிலுவை தொகையால் அவர்களுக்கும் மின்சாரம் இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் நிலுவை தொகை உள்ளதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். ஏற்கனவே பயன்படுத்திய மின்சாரத்திற்காக மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாநிலங்கள் பணம் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது அதற்கான விலையை செலுத்தவில்லை.

பல அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மொத்தம் 60,000 கோடிக்கு மேல் மின் விநியோக நிறுவனங்களுக்கு நிலுவை தொகை பாக்கி வைத்துள்ளன. தாங்கள் பயன்படுத்திய நிலுவை தொகை மட்டுமல்லாமல், பல்வேறு மாநில அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு அறிவித்த மானியங்களும் கூட செலுத்தப்படாமல் உள்ளன. தற்போது 60,000 கோடிக்கு மேல் நிலுவை தொகை உள்ளன. மொத்தத்தில் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்படாத நிலுவை தொகையாக சிக்கியுள்ளது. இது உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவங்களை கடுமையாக பாதிக்கிறது.

இதனால் எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நமது வருங்கால சந்ததியினரை இருளில் வாழ வற்புறுத்த போகிறோமா என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் நிலுவை தொகையை பெறவில்லை என்றால் அவை வளராது, மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரசுக்கு சொந்தமான ஜென்கோஸ் தவிர்த்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஜென்கோஸூக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவை தொகை 1,01,442 கோடி ரூபாய் ஆகும். இதில் சி.பி.எஸ்.இ.களுக்கான நிலுவை தொகை மட்டும் 26,397 கோடி ஆகும். மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின் நிலுவை தொகை 62,931 கோடி ரூபாய் ஆகும்.

மாநில அரசுகளிடம் இருந்து விநியோக நிறுவங்கள் இன்னும் பெற வேண்டிய மானியத்தொகை 76,337 கோடி ரூபாய் ஆகும். எனவே மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவங்களுக்கு மாநில அரசுகள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவை தொகை 2,40,719 கோடி ரூபாய் ஆகும். மாநிலங்களில், மகாராஷ்ட்ரா 21,656 கோடி ரூபாயும், தமிழ்நாடு 20,990 கோடி ரூபாயும், ஆந்திரா 10,109 கோடி ரூபாயும், தெலுங்கானா 7,388 கோடி ரூபாயும், ராஜஸ்தான் 5,043 கோடி ரூபாயும் நிலுவை பட்டியலில் முன்னனியில் உள்ளன.

இதேபோல் டிஸ்காம்களுக்கான நிலுவை தொகையில், தெலுங்கானா 11,935 கோடி ரூபாயும், மகாராஷ்ட்ரா 9,131 கோடி ரூபாயும், ஆந்திரா 9,116 கோடி ரூபாயும், தமிழ்நாடு 3,677 கோடி ரூபாயும் நிலுவை தொகையை வைத்துள்ளன. மாநில அரசுகள் மின் நிலுவை தொகையை விரைவில் செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் தங்கள் மின் கட்டணத்தை நேர்மையாக செலுத்தும்போது கூட, சில மாநிலங்கள் ஏன் மீண்டும் மீண்டும் நிலுவை தொகையை செலுத்துகின்றன என்பதற்கான காரணங்களை கவனியுங்கள் என பிரதமர் கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின்துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எரிசக்தி துறையின் பலம், தொழில் தொடங்குவதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.