பஞ்ச்ஷிரில் தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய தேசிய எதிர்ப்பு முன்னணி..!

ஆப்கானிஸ்தான் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி படை(NRF) வியாழன் அன்று தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. இதில் இரண்டு தாலிபான்கள் கொல்லப்பட்ட நிலையில் நான்கு தாலிபான்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். துணை ஜனாதிபதியான அம்ருல்லா சலே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் தன்னை தற்காலிக ஜனாதிபதியாகவும் அறிவித்து கொண்டார்.

ஆப்கன் முழுவதும் தாலிபானின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பஞ்ச்ஷீர் மாகாணம் மட்டும் தாலிபானின் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கு அஹ்மத் மசூத் தலைமையிலான தேசிய எதிர்ப்பு முன்னணி உள்ளது. அமெரிக்கா வெளியேறியதில் இருந்து தாலிபானுக்கும் தேசிய எதிர்ப்பு முன்னணிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தாக்குதல் நடத்துவதற்காக தாலிபான்கள் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளனர். அந்த ஹெலிகாப்டரை தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் தாக்கி அழித்துள்ளனர். தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், நான்கு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதை தேசிய எதிர்ப்பு முன்னணியின் செய்தி தொடர்பாளர் சிப்கதுல்லா அஹ்மதி உறுதி படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில். தேசிய எதிர்ப்பு முன்னணியின் துணிச்சலான படைகள் பஞ்ச்ஷீரின் அரேஸூ பள்ளத்தாக்கில் தாலிபானின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆதரவாக சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரின் புகைப்படம் மற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும், இஸ்லாமிய அறிவுறுத்தல்கள் மற்றம் மனிதாபிமான சட்டங்களின்படி நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை தாலிபான் தரப்பில் இருந்து மறுக்கவோ அல்லது உறுதிபடுத்தவோ இல்லை. கடந்த மே 30 அன்று பஞ்ச்ஷீர் மாகாணத்தில் பதுங்கி இருந்த 15க்கும் மேற்பட்ட தாலிபான்களை கொன்றதாக தேசிய எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. ஆனால் தாலிபான்கள் அதனை மறுத்து 3 பேர் மட்டுமே காயமடைந்தாக தெரிவித்தது. சமீபத்திய வாரங்களில் தேசிய எதிர்ப்பு முன்னணி அதன் படைகளை மறுசீரமைத்து தலிபான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.