மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்ததும், போர்ச்சுகலுக்கு அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993, மார்ச் 13ல் மும்பையில் 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 257 பேர் உயிரிழந்தனர் மற்றும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.

மேலும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான அபு சலீம் 2002 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அபு சலிம் போச்சுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த போர்ச்சுக்கல் நீதிமன்றம் அபு சலீம் நாடு கடத்தப்பட்டால் அவர் மீதான வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்க கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த உறுதிமொழியை அப்போதைய துணை பிரதமர் எல்.கே,அத்வானி ஏற்றுக்கொண்டார். பின்னர் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அபு சலீம் 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலிமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

போர்ச்சுக்கல் அரசுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அபு சலீம் 2030 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் பிப்ரவரி 25, 2015 அன்று சிறப்பு தடா நீதிமன்றம் 1995 ல் மும்பையை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரதீப் ஜெயின் மற்றும் அவரது ஓட்டுநர் மெஹந்தி ஹாசனுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் சலீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் போர்ச்சுக்கல் அரசுக்கு அளித்த வாக்குறுதியின்படி, 25 ஆண்டு தண்டனை முடிந்த பிறகு தன்னை விடுவிக்க வேண்டும் என அபு சலீம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், போர்ச்சுக்கல் அரசுக்கு அளிக்கப்பட்ட இறையாண்மை உத்தரவாதத்தில் இருந்து நீதித்துறை சுதந்திரமானது என வாதிட்டார்.

மேலும் உறுதியான உத்தரவாதத்திற்கு நீதிமன்றம் கட்டுப்படவில்லை எனவும், சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, மே 5 ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் போர்ச்சுக்கல் அரசுக்கு அளித்த வாக்குறுதிக்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டும். 25 ஆண்டுகளுக்கு பிறகு அபு சலீமை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியிடம் மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.