கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை..?

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் உணவு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த நிலைக்கு கொரோனாவினால் சுற்றுலாத்துறை பாதித்ததால் நாட்டிற்கு வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் சிலர் சட்ட விரோதமாக உணவு பொருட்களை பதுக்கியதே காரணம் என கூறப்படுகிறது. அந்நிய செலாவணி குறைந்து வரும் நிலையில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது. அந்நிய செலாவணியை சேமிப்பதற்காக இராசயன மற்றும் உர இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்தது.

இந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், பால், வெங்காயம், உருளைகிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரையின் விலை 200 ரூபாயை தொட்டுள்ளது.

பணவீக்கம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 2019ல் அந்நிய செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 2.8 பில்லியன் அமெரிக்கன் டாலராக குறைந்துள்ளது. விரைவில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால் மீழ்வது கடினம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்டோபர் மாதத்தில் தேயிலையின் உற்பத்தியும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தேயிலை உற்பத்தியினால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. இது இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 10 சதவீதம் ஆகும். இந்த நெருக்கடியினால் தேயிலையின் உற்பத்தி 50 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

மசாலா மற்றும் நறுமண பொருட்களின் ஏற்றுமதியும் இந்த பொருளாதார நெருக்கடியால் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நெருக்கடியை சமாளிக்கவும் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியை அத்தியாவசிய சேவைகளின் தலைவராக இலங்கை அரசு நியமித்துள்ளது. இருப்பினும் சீனாவின் கடன் வலையில் சிக்கியதால் தான் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.