சீனாவின் 3 சூரிய மின்சக்தி திட்டத்தை ரத்து செய்து இந்தியாவிற்கு வழங்கிய இலங்கை..?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகளில் நிறுவப்படும் மூன்று சூரிய மின் திட்டங்களை இலங்கை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் முன்பு சீனாவுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அதனை ரத்து செய்து அந்த திட்டத்தை இந்தியாவிற்கு இலங்கை வழங்கியுள்ளது.

இந்த மின்திட்டத்தை சீனா கையாண்டால் பாதுகாப்பு அச்சுருத்தல் உள்ளாகும் என இந்தியா கூறியதால் சீனாவுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. தற்போது இலங்கை 51 பில்லியன் டாலர் கடனில் சிக்கி தவிக்கும் நிலையில் நிதி நிலைமை சரியாகும் வரை வெளிநாட்டிற்கு கடனை திருப்பி செலுத்த இயலாது என சமீபத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் இந்தியாவிடம் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டுள்ளது இலங்கை. அந்த கடனை வழங்க இந்தியா ஒப்புகொண்டுள்ளது. இதுதவிர தற்போதைய இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. அங்கு நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டாலர் பிணை தொகையை கேட்க உள்ளது.

சீனா கூடுதலாக 1 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டது. இருப்பினும் அது காலதாமதமாகி வருவதால் வேறு நாட்டிடம் இலங்கை கடன் கேட்டு வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் சீனாவின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த திட்டத்தினால் நன்மையை விட தீமையே அதிகம் இருப்பதாக மற்ற நாடுகள் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ஊழல்கள், தொழிலாளர் மீறல்கள், சுற்றுச்சூழல் அபாயங்கள் மற்றும் மக்கள் போராட்டம் ஆகிய காரணங்களால் சீனாவின் BRI திட்டம் மற்ற நாடுகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு மே மாதம் கையொப்பமிட்ட இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை கூட்டாக நிதியுதவி செய்து உருவாக்கப்பட இருந்த கிழக்கு கொள்கலன் முனையம் சீனாவின் தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர்கள், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இலங்கை அதன் பலனை அறுவடை செய்திருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Also Read: இலங்கையை தொடர்ந்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி.. எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு..

இதேபோன்று சீனாவிற்கு முன்பே ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் LNG திட்டத்திற்காக அமெரிக்கா-கனடா கையெழுத்திட்டது. ஆனால் மைத்திரி-ரணில் அரசாங்கம் அதனை ரத்து செய்து துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்தது. அமெரிக்கா-கனடா மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.4 பில்லியன் டாலர் ஆகும்.

இந்த திட்டம் நிறைவேறியிருந்தால் இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்காது. இலங்கையில் சீனா உருவாக்கி வரும் போர்ட் சிட்டி திட்டமும் நிச்சியமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் யாரும் இதுவரை இதில் முதலீடு செய்யவில்லை. இந்த திட்டத்திற்கு 14 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: சீன நிறுவனங்களை வெளியேற்றிய இத்தாலி.. பின்னடைவில் சீனா, தைவானுக்கு வாய்ப்பு..?

சீனா போர்ட் சிட்டி திட்டத்திற்காக இந்திய பெருங்கடலில் 269 ஹெக்டேர் நிலத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு ஈடாக 116 ஹெக்டெர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது. இலங்கையின் இந்த முடிவு இந்தியாவை மேலும் எரிச்சலடைய செய்துள்ளது. இருப்பினும் இந்தியா கூடுதலாக 2 பில்லியன் டாலர் கடனுதவி மற்றும் கூடுதலாக 11,000 மெட்ரிக் டன் அரிசியை அனுப்பியுள்ளது.

முடிவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் அரிசியில் இதுவரை 16,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பெண்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய நாப்கின் தயாரிக்க 500,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆராய்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் உட்பட 300 திட்டங்களுக்கு நிதியளித்துள்ளது. அவற்றில் 20 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இலங்கையில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ராஜபக்சே குடும்பம் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சீனாவுக்கு ஆதரவான ராஜபக்சேக்கள் வெளியேற்றப்பட்டால் இலங்கையில் சீனாவின் பிடி மேலும் பலவீனமடையும் என கூறப்படுகிறது. சீனாவை தனிமைபடுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.