இந்திய நேபாள எல்லையில் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியம் கடத்தல்.. 15 பேர் கைது..

இந்த மாத துவக்கத்தில் இந்திய-நேபாள எல்லைக்கு அருகே உள்ள நேபாளத்தின் பிரத்நகரில் இந்தியாவிற்குள் கடத்தப்பட இருந்த 2 கிலோ யூரேனியத்தை நேபாள் போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஜூலை 1 மற்றும் ஜூலை 3 ஆம் தேதி நடந்துள்ள நிலையில் தற்போது ஊடகங்களில் கசிந்துள்ளது. பீகாரின் இந்திய எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் பிரத்நகரில் இந்த 2 கிலோ யூரேனியம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் இந்தியா வழியாக வெளிநாடுகளுக்கு இந்த கதிரியக்க பொருளை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

யுரேனியம் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகள், சிறிய குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம்-235 அணுமின் நிலையங்களில் அணு எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணுமின் நிலையங்களில் நீராவியை உற்பத்தி செய்ய யுரேனியத்தால் நீர் சூடாக்கப்படுகிறது. பின்னர் இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய எல்லையில் யூரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் ஹிமால்சஞ்சர் அறிக்கையின்படி, ஜூலை 1 ஆம் தேதி ஒரு கிலோ யூரேனியத்துடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜூலை 3 ஆம் தேதி ஒரு கிலோ யுரேனியத்துடன் மற்றொரு 7 பேர் கொண்ட கடத்தல் குழு பிரத்நகரில் கைது செய்யப்பட்டுள்ளது.

பிரத்நகரில் உள்ள துலடை ஹோட்டலில் வாடிக்கையாளருக்காக காத்திருந்த போது இந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த 2 கிலோ யுரேனியத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து சந்தேகத்திற்கிடமான மற்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் நேபாளத்தில் இருந்து இந்திய எல்லையை கடக்கும் நோக்கத்துடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் யுரேனியம் கைப்பற்றப்பட்டது குறித்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்த கொண்டுவரப்பட்டதா அல்லது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக கொண்டுவரப்பட்டதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.