அதிர்ச்சி சம்பவம்: ஜின்னா கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்ற முயன்ற நபர் கைது..

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள முகமது அலி ஜின்னா கோபுரத்தில் வந்தே மாதரம் என கூறி தேசிய கொடியை ஏற்ற முயன்றவர்களை காவல்துறை கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் ஆந்திராவின் குண்டூரில் உள்ள ஜின்னா கோபுரத்தில் இந்து வாஹினி அமைப்பை சேர்ந்தவர்கள் தேசிய கொடியை ஏற்ற முயன்ற போது அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறை இந்து வாஹினி அமைப்பினரை கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்து வாஹினி அமைப்பினரை போலிசார் கைது செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஜின்னாவின் பெயரில் ஒரு கோபுரமும் வட்டமும் ஏன் உள்ளது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து குடியரசு தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்ற முயன்ற நபரை கைது செய்ததற்காக ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு ஆந்திர மாநில பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் ட்விட்டரில், சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக ஶ்ரீநகரின் லால் சவுக்கில் மூவர்ண கொடி ஏற்றப்பட்ட நிலையில் நாட்டை பிரிக்கும் கொபுரத்தின் மீது மூவர்ண கொடியை ஏற்றுவதற்கு ஜெகன் மோகன் அரசு அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் பாஜக இணை பொறுப்பாளர் சுனில் தியோதர், ஜின்னா வட்டம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என ஜெகன் மோகன் ரெட்டிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக குண்டூரில் உள்ள ஜின்னா கோபுரத்திற்கு மறுபெயரிடுமாறு ஆந்திர பிரதேச பாஜக ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

பாஜக தேசிய செயலாளர் ஒய் சத்ய குமார், தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மற்றும் ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு ஆகியோர் ஜின்னா கோபுரத்திற்கு ஏபிஜே அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆந்திர மாநில மூத்த பாஜக தலைவரான விஷ்ணுவர்தன் ரெட்டி, ஜின்னா கோபுரத்தின் பெயரை மாற்றுவோம் அல்லது கோபுரத்தை இடித்துவிட்டு மையத்திற்கு புதிய பெயரை சூட்டுவோம் என ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மையினரின் வாக்குக்காக ஜெகன் மோகன் அரசு ஜின்னா கோபுரத்தின் பெயரை மாற்றவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.