பெண்களுக்கு பாலியல் தொல்லை; இஸ்லாமிய மத தலைவருக்கு 1075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்
துருக்கியில் பாலியல் குற்றங்களுக்காக இஸ்லாமிய மதத்தலைவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அட்னன் ஒக்டர் (Adnan Oktar) என்ற இஸ்லாமிய மதத் தலைவருக்கு 10 தனித்தனியான குற்றங்களுக்காக இஸ்தான்புல் நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அட்னன் ஒக்டர் இஸ்லாமிய வழிபாட்டு அமைப்பின் தலைவராக உள்ளார். அந்த அமைப்பை குற்றவியல் அமைப்பாக நீதிமன்றம் கூறிவிட்டது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டர் அவரது ஆதரவாளர்களுடன் நாடு தழுவிய தாக்குதலில் ஈடுபட்டப்போது கைது செய்யப்பட்டார்.
கலவரம் மட்டுமில்லாமல், பாலியல் வன்கொடுமை,மோசடி குற்றச்சாட்டுகள், சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவை ஒக்டார் மீது சுமத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் அரசியலில் உளவு பார்த்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
ஒக்டார் மேலான குற்றச்சாட்டுகளை விசாரித்துவரும் காவல்துறையினர் 236 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகிறார்கள். அவர்களில் 78 பேரை கைது செய்துள்ளனர்.
ஒக்டர் தான் ஒரு பழமைவாத மதத்தலைவர் என கூறிக்கொண்டு, மறுபுறம் பெண்கள் புடைசூழ தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுவார். தன்னை சுற்றி உள்ள பெண்களை எப்போதும் “பூனைக்குட்டிகள்” என செல்லமாக அழைப்பார். ஒக்டாவுடன் உள்ள பெண்களில் பலர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
டிசம்பர் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தனக்கு 1,000 தோழிகள் இருப்பதாக ஒக்டர் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். மேலும் “பெண்களுக்காக என் இதயத்தில் அன்பு நிரம்பி வழிகிறது, ‘அன்பு ஒரு மனித குணம்’, ‘இது ஒரு முஸ்லிமின் தரம்” என மற்றொரு விசாரணையில் ஒக்டர் தெரிவித்திருந்தார்.
மேலும், “நான் அசாதாரணமாக சக்திவாய்ந்தவன்” எனவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு ஒக்டர் தலைவராக இருந்த மத அமைப்பு பல பாலியல் குற்ற முறைகேடுகளில் சிக்கியது. அப்போது தான் ஒக்டர் மக்களின் கவனத்திற்கு வந்தார்.
விசாரணையில் ஒரு பெண் கூறுகையில், ஒக்டர் தன்னையும் மற்ற பெண்களையும் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அவரால் கற்பழிக்கப்பட்ட பல பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள கட்டாயம் ஏற்ப்பட்டது என அந்த பெண் தெரிவித்தார். அவரின் தனிப்பட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு CC என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஒக்டர் வீட்டில் இருந்து 69,000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அதனை தோல் மற்றும் மாதவிடாய் சிகிச்சைக்கு பயன்படுத்தியதாக ஒக்டர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் முஸ்லிம் மதபோதகர் பெதுல்லா குலேன் உடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலிசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என ஒக்டர் தெரிவித்துள்ளார்.