சிதறும் பாகிஸ்தான்.. இராணுவதின் மீது தாக்குதல் நடத்தும் பலூச் போராளி குழுக்கள்..

பாகிஸ்தானில் பலூச் சமூகத்தின் கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால் பலூச் தேசியவாத இராணுவம் (BNA) விடுதலை கோரி நீண்ட காலமாக பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுநாள் வரை பலூச்சிஸ்தானில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் முழுவதும் BNA தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தான் இராணுவத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் ஜனவரி 20 அன்று லாகூரில் உள்ள லோஹாரி கேட் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேநேரம் யுனைடெட் பலூச் இராணுவம் (UBA) மற்றும் பலூச் குடியரசு இராணுவம் (BRA) ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு பலூச் தேசியவாத இராணுவம் உருவாக்கப்பட்டது.

லாகூர் தாக்குதலுக்கு இந்த பலூச் தேசியவாத இராணுவம் (BNA) பொறுப்பேற்றது. இந்த பலூச் தேசிய இராணுவம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை கேட்டு போராடுவது மட்டுமல்லாமல், தற்போது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

மர்ரி மற்றும் புக்டி ஆகிய இரண்டு பழங்குடியினர் இருவருமே தனித்தனியாக இரண்டு போராளிக் குழுக்களை கொண்டுள்ளனர். இவற்றில் யுனைடெட் பலூச் இராணுவம் மெஹ்ரான் மர்ரி தலைமையில் செயல்படுகிறது. இவர் பல ஆண்டுகளாக மர்ரிசை வழிநடத்திய மறைந்த கைர் பக்ஷ் மர்ரியின் மகன் ஆவார்.

பலூச் குடியரசு இராணுவம் பிரஹம்தாக் புக்டி தலைமையில் இயங்கி வருகிறது. இவர் 2006 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட புக்டி பழங்குடியினரின் தலைவரான பலூச் சர்தார் அக்பர் புக்டியின் மகன் ஆவார். இந்த இரண்டு குழுக்களும் இணைக்கப்பட்டு தற்போது பலூச் தேசியவாத இராணுவம் (BNA) உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது இவர்கள் சிந்து மாகாணத்தில் தனது குழுக்களை வளர்ப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஜுன் 2020 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் உள்ள போராளி குழுவான சிந்துதேஷ் புரட்சி இராணுவம் (SRA) உடன் கூட்டணி வைத்தனர். இவர்களது நோக்கம் பலுசிஸ்தான் மற்றும் சிந்து மகாணத்தை விடுதலை பெற வைப்பதாகும்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழிதடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த போவதாக இந்த குழுக்கள் ஜுலை 2020ல் அறிவித்தன. ஏற்கனவே இந்த குழுக்கள் சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல சீனர்கள் உயிரிழந்துள்ளனர். பலூச் மற்றும் சிந்து தவிர பாகிஸ்தானின் தாலிபான்கள் என அறியப்படும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பும் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுதவிர ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடனும் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் காபூலில் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் உடனான உறவுகள் மோசமடைந்துள்ளன. பலூச் போராளிகளை ஒழிக்க தாலிபான்கள் பாகிஸ்தான் இராணுவத்திற்கு உதவ முன்வரவில்லை.

இதனால் பலூச் போராளி குழுக்களுடன் பாகிஸ்தான் இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனாவின் மீன்பிடி படகுகள் மற்றும் பொருளாதார வழிதடங்களை பாதுகாப்பதற்காக பலூச் போராளிகளிடம் அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. பலூச் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு ஜம்ஹூரி வதன் கட்சி தலைவர் ஷாஜேன் புக்டியை கடந்த ஆண்டு நியமித்தது.

1970 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இராணுவத்துடன் போரிட்ட மூத்த பலூச் போராளியான மிர் முஹம்மது அலி ஏசியா டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், 1948 ஆம் ஆண்டு பலுசிஸ்தானை பாகிஸ்தான் வலுகட்டாயமாக இணைத்ததில் இருந்தே விடுதலைகோரி தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளார். தற்போது பாகிஸ்தானில் நான்கு பக்கமும் விடுதலைகோரி போராளி குழுக்கள் தாக்கி வருவதால் விரைவில் பாகிஸ்தான் உடையலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.