அடுத்த மாதம் இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சவுதி அரேபிய இளவரசர்..!

சவுதி பட்டத்து இளவரசரும், சவுதி அரேபியாவின் பிரதமருமான முகமது பின் சல்மான் நவம்பர் மாதத்தில் இந்தோனேசியா செல்லும் வழியில் இந்தியாவிற்கு வருகை தந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் அடுத்த மாதம் 15-16 தேதிகளில் இந்தோனேசியாவின் பாலிக்கு பயணம் மேற்கொள்கிறார். பாலிக்கு செல்லும் வழியில் நவம்பர் 14 அன்று சவுதி அரேபிய இளவரசர் பிரதமர் மோடியை சந்திக்க உளளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரியாத்துக்கு சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பை சவுதி அரேபிய இளவரசர் சல்மானுக்கு அனுப்பி முன்கூட்டியே வருமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் ரஷ்ய உக்ரைன் மோதல் மற்றும் எண்ணெய் தொடர்பான பேச்சுவார்த்தை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு, 100 பில்லியன் டாலர் முதலீடு என்ற சல்மானின் வாக்குறுதி மற்றும் எண்ணெய் இருப்புகள் மற்றும் பசுமை எரிசக்தி திட்டங்களில் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் மறுஆய்வு செய்ய உள்ளனர். பிரதமர் மோடி கடந்த 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ரியாத்துக்கு பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை பிரதமரி அறிவித்தார். தற்போது நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் இந்த திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தியது.

இந்த நிலையில் அடுத்த வருடம் இந்தியா ஜி-20 உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. இதேபோல் அடுத்த மாதம் 10-13 தேதிகளில் கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் 30 வது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

ஆனால் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வாரா என தெரியவில்லை. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காத பட்சத்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கம்போடியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆசியான் தூதர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.