இந்தியாவில் ஜெட் இன்ஜின் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ள சஃப்ரான் நிறுவனம்..?

பிரான்ஸ் விமான எஞ்சின் தயாரிப்பாளரான சஃப்ரான் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆலிவியர் ஆண்ட்ரீஸ் தலைமையிலான உயர்மட்ட குழு செவ்வாய் அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சஃப்ரான் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆண்ட்ரீஸ், இந்தியாவில் இந்திய மற்றும் வெளிநாட்டு வணிக விமான நிறுவனங்களுக்கான LEAP-1A மற்றும் LEAP-1B இன்ஜின்களை மாற்றியமைப்பதற்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO) வசதியை ஐதராபாத்தில் அமைக்க உள்ளதாக ராஜ்நாத்சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்ஸ் மற்றும் சஃப்ரான் எலக்ட்ரிக்கல் அண்ட் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 துணை நிறுவனங்களையும் இந்த வாரம் ஐதராபாத்தில் அமைக்கப்படும் என ஆண்ட்ரீஸ் ராஜ்நாத்சிங்கிடம் தெரிவித்துள்ளார். 150 மில்லியன் டாலர் முதலீட்டில் ஐதராபாத்தில் அமைய உள்ள MRO வசதி, 600 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கூறப்படுகிறது.

ஐதராபாத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 36 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் அமைய உள்ள துணை நிறுவனமான சஃப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்ஸ், விமான என்ஜின்களுக்கான பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிக்கும் தயாரிப்பு வசதியை நிறுவுவதாக அறிவித்துள்ளது.

மற்றொரு துணை நிறுவனமான சஃப்ரான் எலக்ட்ரிக்கல் அண்ட் பவர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிவில் மற்றும் போர் விமானங்களுக்கான ஹர்னெஸ்களை (Harness) உற்பத்தி செய்யும். மேலும் இந்தியாவின் ஏரோநாட்டிக்ஸ் இந்துஸ்தான் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் இணைந்து சஃப்ரான் HAL ஏர்கிராப்ட் என்ஜின்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகவும் சஃப்ரான் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் விமான என்ஜின்கள் மற்றும் ஹெலிகாப்டர் என்ஜின்களுக்கான திடமான குழாய் உட்பட உதிரி பாகங்களை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனத்தை பெங்களுரில் அமைக்க உள்ளதாக அதன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய போர் விமானத்திற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு வரும் காவேரி இன்ஜினில் தொழிற்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்ள சஃப்ரான் ஒப்புகொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.