ரஷ்யா உக்ரைன் போர்.. தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்பு உண்டா..?

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. அதே பாணியில் சீனா தைவானை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில் முழு உக்ரைனையும் ரஷ்யா கைப்பற்றும் என சர்வதேச வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அதே போல் சீனாவும் தைவான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா என கேட்டால், அதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

கொரோனா பரவல், இந்தியாவுடன் எல்லையில் பிரச்சனை, ஹாங்காங் பிரச்சனை என சீனா அடிமேல் அடிவாங்கி கொண்டிருக்கிறது. இதனால் பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு தங்களது நிறுவனங்களை மாற்றிவிட்டன.

வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல லட்சக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வாங்க மக்கள் முன்வரவில்லை. இதனால் பணவீக்கமும் குறைந்துள்ளது.

இதுதவிர நிலக்கரி விலை உயர்ந்து வருவதால் மின்துறை பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையும் உயர்ந்து வருவதால் எரிசக்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும். தைவான் உக்ரைனை விட சிறிய நாடாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை வைத்துள்ளது.

தைவான் நூற்றுக்கும் மேற்பட்ட மிகச்சிறிய தீவுகளை கொண்டுள்ளது. அந்த தீவுகளில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி துப்பாக்கிகள் நிரப்பப்பட்டுள்ளன. தீவில் பல சுரங்கப்பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் சீனா தைவான் மீது போர் தொடுத்தால் மிகப்பெரிய அழிவினை சந்திக்க வேண்டும்.

சீனா தைவானை தாக்கினால், தைவானை பாதுகாக்க ஜப்பான் போரில் இறங்கும். ஏனென்றால் சீனா தைவானை கைப்பற்ற நினைத்தால் தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் களத்தில் இறங்கும் என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். ஜப்பான் களத்தில் இறங்கினால் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும் களத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதுதவிர குவாட் நாடுகளும் தைவானுக்கு ஆதரவாக களம் இறங்க வாய்ப்புள்ளது. சீனா தைவானை கைப்பற்ற நினைத்தால் தைவானுக்கு ஆயுதம் தருவோம் என ஆஸ்திரேலியா கூறியுள்ளது. எனவே குவாட் அமைப்பில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து இந்தியாவும் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ரஷ்யா உக்ரைனை தாக்கி வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. ஆனால் இந்தியா, சீனா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் சீனா தைவான் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பொருளாதாரத்தில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் ஏறக்குறைய தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் தைவான் சிப் உற்பத்தியில் 92 சதவீத பங்கை கொண்டுள்ளது. சீனாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை இல்லை. அதனை நிறுவ பல ஐரோப்பிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தைவான் மீது போர் தொடுத்தால் சீனாவின் மின்னனு துறை மிக்ப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்திக்கும்.

தைவானில் உற்பத்தி தடைப்பட்டால் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் போரில் வெற்றிபெறவில்லை என்றால் ஜி ஜின்பிங்கின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது. இதனால் சீனா தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.