விசா, மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக சீனாவின் யூனியன் பேவை பயன்படுத்த உள்ள ரஷ்யா..?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசா மற்றும் மாஸ்டர்கார்டு ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு பதிலாக சீனாவின் யூனியன் பே பயன்படுத்தப்படும் என ரஷ்ய வங்கிகள் அறிவித்துள்ளன.

சனிக்கிழமை உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை தொடர்ந்து விசா மற்றும் மாஸ்டர்கார்டு ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாகவும், நாட்டின் அனைத்து வங்கிகளையும் அவற்றின் கட்டண முறைகளில் இருந்து துண்டிப்பதாகவும் அறிவித்துள்ளன.

இதன் மூலம் இனி ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டை பயன்படுத்த இயலாது. ரஷ்யாவிற்கு வெளியே வழங்கப்பட்ட கார்டுகளும் இனி ரஷ்யாவில் வேலை செய்யாது. இதற்கு முன்னதாக பேபால், நெட்ஃபிளிக்ஸ், இன்டெல், இன்டிடெக்ஸ் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தன.

இதனை அடுத்து ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான Sber Bank, Alfa Bank மற்றும் Tinkoff Bank ஆகியவை சீனாவின் யூனியன் பேவை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன, ரஷ்யாவின் மற்ற சில வங்கிகளான Pochta Bank, Gazprom Bank, Promsvyaz Bank மற்றும் Sovcom Bank ஆகிய வங்கிகளும் யூனியன் பே கார்டு அமைப்புடன் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளன.

இந்த அனைத்து வங்கிகளும் சீனாவின் யூனியன் பே நிறுவனத்துடன் இணைந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளன. சீனாவின் யூனியன் பே 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விசா மற்றும் மாஸ்டர்கார்டுக்கு மாற்றாக சீனா இதனை பயன்படுத்தி வருகிறது.

இந்த யூனியன் பே சர்வதேச அங்கீகாரத்துடன் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதால் யூனியன் பே ரஷ்யாவின் சொந்த கட்டண முறையான MIR உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2014ல் ரஷ்யா கிரிமியாவை இணைத்ததில் இருந்து மேற்கு நாடுகளை நிதி சார்ந்து இருப்பதை குறைக்க நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.