அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள்.. அவசர நிலையை அமல்படுத்திய பாகிஸ்தான்..?

உலகில் இதுவரை கேள்விப்படாத வகையில் பலாத்காரம் காரணமாக ஒரு நாடு அவசர நிலையை அமல்படுத்த உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தினமும் பாலியல் கற்பழிப்பு அதிகரித்து வருவதால் பஞ்சாப் மாகாணம் ‘கற்பழிப்பு அவசரநிலையை’ அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

திங்களன்று பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பது சமூகம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடுமையான பிரச்சனையாக உள்ளது. பஞ்சாபில் தினமும் 5 முதல் 6 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகின்றன.

இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கு சிறப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கற்பழிப்பு வழக்குகளை சமாளிக்க நிர்வாகம் ‘கற்பழிப்பு அவசரநிலையை’ பிரகடனப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சிவில் சமூகம், பெண்கள் உரிமை அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் கடந்த ஆறு மாதங்களில் குடும்ப மரியாதை என்ற பெயரில் மொத்தம் 2,439 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பஞ்சாப் தலைநகரான லாகூரில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,300 க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் (HRCP) வெளியிட்ட 2015-2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 22,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 22,000 பேரில் 77 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். இதனால் தண்டனை விகிதம் 0.3 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. குளோபல் ஜென்டர் கேப் இன்டெக் 2021 தரவரிசையின்படி, 156 நாடுகள் கொண்ட பட்டியலில் பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது.

கடைசி இடத்தில் ஈராக், யேமன் மற்றம் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றத்தின் (IFFRAS) ஆய்வின்படி, கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 14,456 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், குடும்ப வன்முறை மற்றும் பிற வகையான பாகுபாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

Also Read: பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 2,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்..

2018 ஆம் ஆண்டில் நாட்டில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற வகை துன்புறுத்தல் தொடர்பாக 5,048 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு 4,751 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 4,276 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டு 2,078 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சக ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read: பாகிஸ்தானில் 2 இந்து சிறுமிகள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..

தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை நடத்திய கருத்து கணிப்பில் 2011 கணக்கெடுப்பின்படி, உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 90 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையை அனுபவிப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் கௌரவ கொலை என்ற பெயரில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தானில் யுனிஃசெப் அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த பாதுகாவலர்..

Leave a Reply

Your email address will not be published.