தனியார் மருத்துவ படிப்புக்கான கட்டணம் குறைப்பு..? பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!

தனியார் மருத்துவ கல்லூரிகள் தங்களது 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தில் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜன் ஓளஷதி பரியோஜனா பயனாளிகளுடன் ஜன் ஓளஷதி திவாஸ் விழாவில் வீடியோ மூலம் பிரதமர் உரையாடினார். அப்போது கூறியதாவது, சில நாட்களுக்கு முன் ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்திருந்ததை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம் என பிரதமர் மோடி கூறினார். இது தொடர்பான அறிவிப்பாணையை தேசிய மருத்துவ ஆணையம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் மாநில அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் கட்டண நிர்ணய குழுவை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் 2,500 கோடி ரூபாயை சேமிப்பார்கள் என பிரதமர் தெரிவித்தார். மேலும் அவர்கள் தங்களது தாய்மொழியில் மருத்துவம் மற்றும் தொழிற்நுட்ப கல்வியை பெற முடியும். இந்த முடிவால் ஆங்கிலம் படிக்காத ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளும் மருத்துவர்களாக முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, புற்றுநோய் மற்றும் காசநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான 800 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை மத்திய அரசு கட்டுபடுத்தியுள்ளது. மத்திய அரசின் மக்கள் மருந்தகம் (ஜன் ஓளஷதி கேந்திரங்கள்) மூலம் மக்கள் பணத்தை மிச்சப்படுத்தி உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மற்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு ஆயிரகணக்கில் பணம் செலுத்தும் நிலையில் நாம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி உள்ளோம். மக்கள் பணம் செலுத்த தேவையில்லை. நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க அரசு 30,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது என்றார்.

இந்த நிதியாண்டின் புள்ளி விவரங்களை நாம் பார்த்தால் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் மக்கள் மருந்தகம் மூலம் விற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டே ஏழை மற்றும் நடுத்தர மக்களால் 5,000 கோடி சேமிக்க முடிந்தது. இதுவரை 13,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.

1 ரூபாய்க்கான சானிட்டரி நாப்கின் வெற்றியை குறிப்பிட்டு பேசிய மோடி, நாடு முழுவதும் 21 கோடி சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள பெண்களின் வாழ்க்கையை மக்கள் மருந்தகம் எளிதாக்கியுள்ளது என்பதை காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் 8,500 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய் மற்றும் இதயநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு தேவையான 800 க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஸ்டென்டிங் மற்றும் முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவுகள் கட்டுக்குள் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளதாகவும், இந்த அனைத்து முடிவுகளாலும் ஏழைகளின் 13,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக மோடி கூறியுள்ளார். மேலும் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய மோடி, இந்த திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் 70,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தால் 550 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார். பாட்னாவை சேர்ந்த பயனாளி ஹில்டா அந்தோணியுடன் உரையாடிய மோடி, மக்கள் மருந்தகம் பற்றி எப்படி தெரியும் மற்றும் அவற்றின் தரம் குறித்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த அந்தோணி, முன்பு 1,200-1,500 ரூபாய்க்கு பதிலாக மக்கள் மருந்தகத்தில் 250 ரூபாய்க்கு மருந்துகளை பெற முடிந்ததால் பெரிதும் பயனடைந்ததாக கூறினார். மேலும் ஜன் ஒஷதியின் நன்மைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமூகத்தின் கல்வியறிவு பிரிவினர் முன்வர வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.