உ.பி., உத்ரகாண்ட் அரசுகள் கொண்டுவந்த மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

உத்திரபிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மதமாற்ற சட்டம், சட்டப்படி செல்லுபடி ஆகுமா என விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. 2 மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் திருமணம் செய்வதற்காக இளம்பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் இச்சட்டத்தின் படி 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் செய்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டத்தை உத்தரகாண்ட் அரசு கொண்டுவந்துள்ளது. மேலும் வழக்கறிஞர் விஷால் தாக்ரே மற்றும் சிலர் இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மதமாற்ற வழக்கு தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களை அணுகும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல மாநிலங்களில் இதே போன்று சட்டம் இயற்றப்படுவதால் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கூறினார். இந்த சட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாநில அரசுகளின் கருத்தை ஏற்காமல் எப்படி தடை விதிக்க முடியும் என தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார். இச்சட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என விசாரிக்க ஒப்பு கொண்ட நீதிபதி, உத்திரபிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *