பாகிஸ்தானில் பாதிரியார் சுட்டுகொலை.. நடவடிக்கை எடுக்க இம்ரான்கானுக்கு கோரிக்கை..

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் தேவாலயத்தில் ஆராதனை முடிந்து வீடு திரும்பிய வழியில் மர்ம நபர்களால் கிறிஸ்துவ பாதிரியார் சுட்டுக்கொல்லப்பட்டார். காயமடைந்த மற்றொரு பாதிரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுகிழமை பெஷாவரின் குல்பஹார் பகுதியில் ஆராதனை முடிந்து காரில் வந்து கொண்டிருந்த போது நடந்த தாக்குதலில் பிஷப் வில்லியம் சிராஜ் பல முறை சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான பாதர் நயீம் பேட்ரிக் கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு பாதிரியார் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க வெளியேறும் வழிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்ந தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொருப்பேற்கவில்லை. மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் மூத்த பிஷப் ஆசாத் மார்ஷல், இந்த தாக்குதலை கண்டித்துள்ளார். பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து கிறிஸ்துவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு வேண்டும் என கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மெஹ்முத் கான், தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் உலமா சபையின் தலைவரும் சர்வமத நல்லிணக்கம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு பிரதிநிதியுமான ஹாபிஸ் முஹம்மது தாஹிர் மஹ்மூத் அஷ்ரபி, கிறிஸ்துவ பாதிரிகள் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மையினராக உள்ளனர். கிறிஸ்துவர்கள் இரண்டாவது பெரிய சிறுபான்மையினராக உள்ளனர். உயிரிழந்த பாதிரியாரின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.