பெங்களூரில் ரயில்வே நிலையத்தில் தொழுகை நடத்தும் அறை.. இந்து அமைப்புகள் எதிர்ப்பு..
பெங்களுருவில் உள்ள கிராந்திவீர சங்கோலி ராயண்ணா ரயில் நிலையத்தில் உள்ள சுமை தூக்குபவர்களின் ஓய்வு அறையை முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திங்கள்கிழமை அன்று இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பு இந்திய ரயில்வேயிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், தொழிலாளர்களின் ஓய்வு அறையை முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் இடமாக மாற்றியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.மேலும் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்கு அருகில் மசூதி இருப்பதால் ரயில்வே ஓய்வு அறையை தொழுகை நடத்தும் இடமாக மாற்ற சதி நடப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் தொழுகை நடத்த அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு அறையில் இனி தொழுகை நடத்த அனுமதிக்க கூடாது. இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். தொழுகைக்காக ஓய்வு அறையை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு பெங்களுரில் ரயில் நிலையம் அமைந்துள்ள மெஜஸ்டிக் பகுதியில் முகமது அக்ரம் என்ற பயங்கரவாதியை கைது செய்தது. பெங்களூர் காட்டன்பேட்டை மசூதியில் பதுங்கியிரருந்த ஜெமாத்-உல்-முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த வங்கதேசத்தை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியை போலிசார் கைது செய்தனர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழுகை நடத்துவது தொடர்பான வீடியோ சமூகவலைதலங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செவ்வாய்க்கிழமை தெற்கு ரயில்வே அந்த அறைக்குட வேறு வர்ணம் பூசி அறையை பூட்டியது. அறைக்கு முன் பாதுகாப்பிற்காக காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அறையின் பலகை மாற்றப்பட்டு ரயில்வே துணை ஓய்வு அறை என்ற பலகை வைக்கப்பட்டுள்ளது.