முதன்முறையாக ரூபாயை பயன்படுத்தி ஈரானில் இருந்து யூரியாவை இறக்குமதி செய்ய திட்டம்..?
உலக அளவில் நிலவி வரும் விநியோக பிரச்சனை, அதிக விலை மற்றும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கத்தினால் மத்திய அரசு ஈரான் உடனான தனது முதல் நீண்ட கால யூரியா இறக்குமதி ஒப்பந்தத்திற்கு ரூபாய்களில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடையால் இந்தியா ஈரானிடம் இருந்து யூரியா இறக்குமதி செய்வதை 2019 ஆம் ஆண்டு நிறுத்தியது. பின்னர் அதனை சமாளிக்க சீனா, ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து யூரியா இறக்குமதி செய்துவந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சீனா திடீரென யூரியா ஏற்றுமதிக்கு கட்டுபாடுகள் விதித்தது. இதனால் இந்தியாவில் சில மாநிலங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் யூரியா இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையயே பொருளாதார தடைகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை மூலம் தடையை நீக்குவதற்கான புதிய ஒப்பந்தம் எட்டப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் யூரியா இறக்குமதிக்கு இந்தியா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த யூரியா இறக்குமதியை ரூபாயில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈரானுடன் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் தொழிலாளர்களில் 60 சதவிதம் பேர் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 2.7 டிரில்லியன் பொருளாதாரத்தில் 15 சதவீத பங்கை கொண்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் உர மானிய மசோதா 1.5 டிரில்லியன் ரூபாயை தொட்டது. 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது பெரிய யூரியா ஏற்றுமதியாளராக ஈரான் இருந்தது. இந்தியாவின் 7.5 மில்லியன் டன் யூரியா இறக்குமதியில் ஈரானின் பங்கு 17 சதவீதம் ஆகும். இந்த நிலையில் ஈரான் அமெரிக்காவுடன் பொருளாதார தடை நீக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், யூரியா இறக்குமதி தொடர்பாக இந்தியாவும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.