பிரம்மோஸ் ஏவுகணையை தொடர்ந்து இலகுரக ஹெலிகாப்டரை வாங்க உள்ள பிலிப்பைன்ஸ்..?

பிரம்மோஸ் கப்பல் ஏவுகணையை வாங்க 375 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த சில மாதங்களுக்கு பிறகு, பிலிப்பைன்ஸ் அதன் போர் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிடம் இருந்து மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை (ALH) வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தென்சீனக்கடலில் சீனா உடன் மோதல் நிலவி வரும் நிலையில், பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருவதால், சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸ் தனது இராணுவத்தை வலிமை படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. பிலிப்பைன்ஸ் தனது பழைய ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க ஆர்வமாக உள்ளது.

இது தொடர்பாக இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் தாக்குதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த முடிவும். இதுதவிர உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானத்தின் மீதும் பிலிப்பைன்ஸ் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஹெலிகாப்டர் பேச்சுவார்த்தையின் போதே தேஜாஸ் போர் விமான பேச்சுவார்த்தையும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு உறவுகள் வளர்ந்து வருகின்றன.

இந்த வருடம் ஜனவரியில் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை வாங்குவதற்காக 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் பாதுகாப்பு வன்பொருள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான பிலிப்பைன்ஸ் உடன் அரசாங்க -அரசாங்க இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏற்கனவே தனது பழைய விமானத்திற்கு மாற்றாக மலேசியா தனது விமான டெண்டரில் தேஜாஸ் போர் விமானத்தை இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் JF-17, தென்கொரியாவின் FA-30 மற்றும் ரஷ்யாவின் Mig-35 மற்றும் Yak-130 ஆகியவற்றிற்கு இடையே கடுமையான போட்டி இருந்தபோதும் மலேசியா தேஜாஸ போர் விமானத்தை தேர்வு செய்ய அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் எகிப்து நாடும் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தை வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரிப்பான தேஜாஸ் சூப்பர்சோனிக் போர் விமானம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 48,000 கோடி ஒப்பந்தம் செய்தது.

நிறுவனம் ஏற்கனவே 5 பில்லியன் டாலர் மதிப்பில் தேஜாஸ் MK2 மற்றும் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA தயாரிப்பு பணியை துவங்கியுள்ளது. இது தவிர இந்தியா தனது சிவில் மற்றும் இராணுவ விமானங்களுக்கு சேவைகளை வழங்க பிலிப்பைன்ஸில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைத்தல் (MRO) வசதியையும் அமைக்க உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.