காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்ரவாத அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோரில் உள்ள சலூரா பகுதியின் பானிபோரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் தேடுதல் வேட்டை என்கவுண்டராக மாறியது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மூன்று பயங்வரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, அவன் பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த ஹன்சல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவனிடம் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, 5 கைதுப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.