நட்பு நாட்டுக்கான அந்தஸ்தை இழக்கும் பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் அமெரிக்கா நடவடிக்கை

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் பாகிஸ்தான் நேட்டோ அல்லாத முக்கிய நட்பு நாடாக 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இதனால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நேட்டோ அல்லாத நட்பு நாட்டுக்கான அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதா அமெரிக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இச்சட்டம் அமலானால் வேறு எந்த அமெரிக்க அதிபரும் பாகிஸ்தானை நட்பு நாடாக உரிய சான்றிதழ் இல்லாமல் நியமிக்க முடியாது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்படும்.

ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஹக்கானி நெட்வொர்க் எனப்படும் தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஹக்கானி தீவிரவாத குழுவுக்கு உதவி செய்வதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்பதும் அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.

மேலும் ஹக்கானி நெட்வொர்க் அமைப்பு போன்று எந்தவொரு தீவிரவாத அமைப்பின் நடமாட்டமும் இருக்கக்கூடாது எனவும், ஹக்கானி நெட்வொர்க்கின் மூத்த தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்கா தற்பொழுது 17 நாடுகளுக்கு நேட்டோ அல்லாத நட்பு நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும் இந்த நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் ராணுவ பயிற்சி போன்ற சலுகைகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டால் சிறப்பு சலுகைகள் உட்பட எந்த சலுகையும் கிடைக்காது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கருவிகள் உட்பட அனைத்து சலுகைகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *