FATF ஆல் மீண்டும் சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான்..?
உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), பாகிஸ்தானை மீண்டும் சாம்பல் நிற பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதா நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் ஜூன் 2022 அமர்வு ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்ட்டது. முடிவில் பாகிஸ்தான் தொடர்ந்து சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் பணமோசடிக்கு எதிரான அதன் நடவடிக்கையை சரிபார்க்க பாகிஸ்தானுக்கு ஆன்-சைட் ஆய்விற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில், பாகிஸ்தான் ஆன்-சைட் ஆய்வு வெற்றிகரமாக நிறைவேற்றினால், பாகிஸ்தான் சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் பணமோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க FATF கொடுத்த 34 செயல்முறைகளில் பாகிஸ்தான 32 செயல்முறைகளை முடித்துவிட்டது. இருப்பினும் மீதம்முள்ள இரண்டு செயல்முறைகளை முடித்தால் மட்டுமே சாம்பல் நிற பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும்.
இந்த நிலையில் 34 செயல்முறைகளில் மீதமுள்ள 2 செயல் திட்டங்களை பாகிஸ்தான் கணிசமான அளவு முடித்துள்ளதாக நேற்று நடந்த கூட்டத்தில் FATF கூறியுள்ளது. ஆன்-சைட் ஆய்வை தொடர்ந்து பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் இருந்து அகற்றுவது தொடர்பான முறையான அறிவிப்பு அக்டோபர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
ஒரு நாடு சாம்பல் நிற பட்டியலில் சேர்க்கப்பட்டால் IMF போன்ற உலக அமைப்புகளிடம் இருந்து நிதி உதவி பெறுவதை கடினமாக்குகிறது. கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டால் முற்றிலும் எந்த உதவியும் அந்த நாட்டிற்கு கிடைக்காது. சாம்பல் நிற பட்டியலில் வைக்கப்பட்டால் ஒரு நாடு குறைபாடுகளை நீக்குவதற்கு செயல்படுவதை காட்டுகிறது.
தற்போது வடகொரியா மற்றும் ஈரான் மட்டுமே கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த கூட்டத்தில் மால்டா சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மற்றும் ஜிப்ரால்டர் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் மற்றும் அதன்செயல்பாட்டு தலைவர் ஜாகியுர் ரஹ்மான் லக்வி ஆகியோர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் ஆவர்.
26/11 மும்பை தாக்குதல் மற்றும் 2019 ஆண்டு புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலிஸ் படை மீது குண்டுவீசி தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான மூவரும் இந்தியாவால் தேடப்பட்டு வருகின்றனர். இதில் ஜாகியுர் ரஹ்மான் வக்வியை ஐநாவில் பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டுவந்த முயற்சிக்கு சீனா தடை போட்டுள்ளதால் லக்வியை பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.