போலி என்கவுண்டர் மூலம் 9 பலூச் மக்களை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் இராணுவம்..?

பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் ஜியாரத் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தால் பலூச் மக்கள் 9 பேர் போலி என்கவுண்டர்களால் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் குடும்பத்தினர் அவர்களை காணாமல் போனோர் பட்டியலில் பதிவு செய்து, அவர்களின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி வருவதாக பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பலூச் சுதந்திர ஆதரவு ஆயுத குழுவான பலூச் விடுதலை இராணுவம் (BLA), சில நாட்களுக்கு முன்னர் ஒரு இராணுவ கர்னலை கடத்தி கொலை செய்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் இராணுவம் ஜியாரத் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

ஹர்னாய் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்பது பேரை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தானின் இராணுவத்தின் ஊடக பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது. இருப்பினும் பலூச் விடுதலை இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ISPR கூற்றுகளை மறுத்து படுகொலை செய்யப்பட்ட 9 ஆண்களுக்கும் தங்கள் குழுவுடன் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்கள் என கூறப்படும் பலூச் நபர்களின் புகைப்படங்களை ISPR வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, ஒன்பது பேரும் உண்மையிலேயே கிளர்ச்சியாளர்களா அல்லது பலூச் காணாமல் போனவர்களா என விவாதத்தை தூண்டியுள்ளது. உடல்கள் அடையாளம் காண குவெட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 9 பேரில் 5 பேர் அவர்களின் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டனர். பலுசிஸ்தானின் பல்வேறு பகுதியில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் இறந்தவர்களை அடையாளம் காண குவெட்டா மருத்துவமனையில குவிந்த வண்ணம் உள்ளனர்.

காணாமல் போனவர்களுக்கான பிரச்சார குழுவான பலூச் காணாமல் போன நபர்களின் குரல் (VBMP) இந்த நபர்கள் பாகிஸ்தான இராணுவத்தால் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவரான ஷம்ஸ் சதக்சாய் எனபவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்டு, அன்றிலிருந்து காவலில் வைக்கப்பட்டவர். போலி என்கவுண்டர்கள் இது முதல்முறையல்ல, இதற்கு முன் பலமுறை இதுபோன்ற போலி என்கவுண்டர்களை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாதாரண பொதுமக்களை கிளர்ச்சியாளராக சித்தரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சில் (ஹக்பன் பலுசிஸ்தான்) இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை விசாரிக்க அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் பலுசிஸ்தானில் குறைந்தது 14 பேரை பாகிஸ்தான் இராணுவம் கொன்றுள்ளது. அவர்களில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தற்போது 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் அனைத்து அதிகாரம் படைத்த இராணுவத்தை கேள்வி கேட்கும் அல்லது தனிநபர் அல்லது சமூக உரிமைகளை கோரும் மக்களை பயமுறுத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் காணாமல் போவதை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எந்தவொரு கைது வாரண்ட் அல்லது குற்றச்சாட்டு இல்லாமல் அல்லது வழக்கு தொடராமல் அந்த நபர்களை பாகிஸ்தான் இராணுவம் கைது செய்து காணாமல் போனவர்களின் பட்டியலில் இணைத்து வருவதாக கூறப்படுகிறது.

பலுசிஸ்தானில் கடந்த 2000 ஆண்டு முதல் பாகிஸ்தான் அதிகாரிகளால் பலூச் மக்கள் பலவந்தமாக கடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலும் மாணவர்களே அதிகம் என கூறப்படுகிறது. கடத்தப்பட்டவர்களில் பல அரசியல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கவிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்குவர். கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான பலூச் மக்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டனர் மற்றவர்கள் சித்தரவதை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போத 9 பலூச் மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் 12 மணிக்கு குவெட்டா பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன் போராட்டம் நடத்த உள்ளதாக காணாமல் போனவர்களின் குரல் தலைவர் நஸ்ருல்லா பலூச் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.