பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பலூச் போராளிகள்.. அனைவரும் உயிரிழப்பு..

குவெட்டா கார்ப்ஸ கமாண்டரி வெப்டினன்ட் ஜெனரல் சர்ஃபராஸ் அலி மற்றும் 5 பேருடன் சென்ற பாகிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் லாஸ்பேலா பகுதியில் திங்கள் கிழமை விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இது விபத்து என கருதப்பட்ட நிலையில் பலூசிஸ்தான் விடுதலை போராளிகள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது தெரியவந்துள்ளது. தகவலின்படி, ஆகஸ்ட் 1 அன்று பலுசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட உடனேயே ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாட்டு உடனான தொடர்பை இழந்தது.

காணாமல் போன ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் கண்டுபடிக்கப்பட்டது. பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வீரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவத்தின் ஹெலிகாப்டரை குறிவைத்து தாக்கி அழித்ததாக பலுச் ராஜி ஆஜோய் சங்கர் (BRAS) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பலோச் கான் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், பலுசிஸ்தானின் விண்டருக்கும் நூரானிக்கும் இடையே உள்ள மலை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஹெலிகாப்டரை பலுச் ராஜி ஆஜோய் சங்கர் அமைப்பினர் தாக்கி அழித்ததாக கூறியுள்ளார்.

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெலிகாப்டர் மோசமாக சேதமடைந்து தாரேஜியில் உள்ள மூசா கோத் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் இருந்த 6 எதிரிகளும் கொல்லப்பட்டனர். அவர்களில் பிரிகேடியர் அம்ஜத் ஹனிஃப் (டிஜி கடலோர காவல்படை), மேஜர் சயீத் (விமானி) மேஜர் தல்ஹா (இணை விமானி) மற்றும் நாயக் முதாசிர் (குழு தலைவர்) ஆகியோர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

முக்கியமாக ஹெலிகாப்டர் தாக்குதலில் உயிரிழந்த லெப்டினன்ட் ஜெனரல் சர்ஃபராஸ் அலி பலுசிஸ்தானில் ராணுவ உளவுத்துறையின் டைரக்டர் ஜெனரலாகவும், எல்லைப்புற கார்ப்ஸ் தெற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் இருந்ததாக பலோச் கான் கூறியுள்ளார். சர்ஃபராஸ் அலி பலுச் இனப்படுகொலை மற்றும் பலுச் மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபட்டவர் என கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பிறகு பலுச் போராளிகள் தங்கள் பாதுகாப்பான இடங்களை வெற்றிகரமாக அடைந்ததாக பலோச் கான் தெரிவித்துள்ளார். பலூச் சுதந்திர போராட்ட வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்பது தாமதமானதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இராணுவம் முழுவதுமாக வெளியேறி பலூச் சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை தாக்குதல் நடத்தப்படும் என பலோச் கான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.