பாகிஸ்தான் விமானப்படையின் தகவல்கள் திருட்டு.. கைவரிசை காட்டிய இந்திய ஹேக்கர்கள்..?

பாகிஸ்தான் விமானப்படை தொடர்பான முக்கியமான இராணுவ தகவல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை (PAF) தலைமையகத்தில் அமைந்துள்ள கணினி அமைப்புகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மே மாதத்தில் நடைபெற்றுள்ள நிலையில், இது தொடர்பான தகவல்கள் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் நெருங்கிய வட்டாரங்களில் கசிந்துள்ளது. சைபர் பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படும் சீன மற்றும் பாகிஸ்தான் அமைப்புகளின் கூற்றுபடி, இந்த சைபர் தாக்குதல் இந்திய நிறுவனங்களால் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இராணுவ அமைப்புகளை ஹேக் செய்த இந்த நிறுவனங்கள் மால்வேர்களை பதிவிறக்கம் செய்துள்ளன. மால்வேர்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு, கணினியில் சேமிக்கப்பட்ட ஏராளமாக ஆவணங்கள், ஃப்ரஷன்டேசன், என்கிரிப்டட் ஃபைல்ஸ் உள்ளிட்ட கோப்புகள் திருடப்பட்டுள்ளன.

கணினிக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து வருவது போல் மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சல்களை திறந்ததால் கணினி ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட கோப்புகளில், செயற்கைகோள் தொடர்பு, இராணுவ தொடர்பு மற்றும் அணுசக்தி வசதிகள் தொடர்பானவை என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்தத்தில் பாகிஸ்தானின் உயர்மட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் அனுப்பிய கடிதங்கள் உட்பட 15,000 க்கும் மேற்பட்ட கோப்புகள் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் கணினிக்குள் நுழைந்த ஹேக்கர்களால் விட்டு செல்லப்பட்ட தடயங்களின் அடிப்படையில் ஊடுருவலை அடையாளம் காண முடிந்ததாக பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதத்திலும் பாகிஸ்தான் கடற்படையை இலக்காக கொண்டு இதேபோன்று தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் சீன அரசு ஊடகங்கள், கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீன இராணுவ நிறுவனங்கள் மீது தனித்தனி இணைய தாக்குதல்கள் நடத்திய, இந்தியாவை தளமாக கொண்ட மற்றொரு நிறுவனம் பற்றிய அறிக்கைகளை வெளியிட்டன.

இந்த தாக்குதல்கள் தரவுகளை திருடியது மட்டுமல்லாமல், எரிசக்தி தொடர்பான உள்கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளன என ஊடகங்கள் கூறியுள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக இந்திய இராணுவம் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பெரும்பாலான வழக்கில் தற்போது நடத்தப்பட்டது போல் மின்னஞ்சல் மூலம் மால்வேர் அனுப்பப்படுகிறது.

கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு மும்பையின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நடத்தினர். இதனால் மும்பையில் பரவலாக மின்தடை ஏற்பட்டது. இருப்பினும் அப்போது இந்த தாக்குலை தாங்கள் நடத்தவில்லை என சீனா மறுப்பு தெரிவித்தது. தற்போது இந்தியா ஹேக்கர்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் மீது சைபர் தாக்குதல் நடத்திவருவதாக இருநாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.