லிபுலேக்கில் சாலை அமைக்கும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு நேபாளம் எதிர்ப்பு..

உத்தரகாண்டில் டிசம்பர் 30 அன்று ஹல்த்வானியில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து இருந்த தேர்தல் பேர்ணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, விபுலேக்கிற்கு தனது அரசாங்கம் சாலையை நீட்டித்துள்ளதாகவும், அதனை மேலும் நீட்டிக்க விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் மோடி கூறினார். இதற்கு நேபாளம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மற்றும் நேபாள எல்லையில் உத்தரகாண்டின் முச்சந்தியில் அமைந்துள்ள லிபுலேக் பகுதியை சீனாவின் தூண்டுதலால் நேபாளம் உரிமை கோரி வருகிறது. முன்னாள் பிரதமரும் நேபாள் CPN கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜலா நாத் கனல், பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்ட பகுதிகள் என்பது இந்திய அரசுக்கு நன்றாக தெரியும். நேபாள அரசின் ஆலோசனையின்றி அங்கு நடைபெறும் எந்தவொரு பணியும் சட்டவிரோதமாகும். அது நமது பிராந்திய ஒருமைபாடு மற்றும் தேசிய இறையாண்மையை மீறும் செயல் ஆகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய தலைவர்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை எங்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எல்லையில் உள்ள எங்கள் பகுதியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நேபாள அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என ஜலா நாத் கனல் கூறியுள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-UML, நேபாளத்தின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை மீறும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. இந்த கட்சியின் வெளியுறவு துறை தலைவர் ராஜன் பட்டாராய், இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு..

சாலைகள் மற்றும் இதர கட்டுமானங்களை நிறுத்த வேண்டும். இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும், தீர்வு எட்டப்படும் வரை அங்கு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என பட்டராய் தெரிவித்துள்ளார். நாட்டின் பிராந்திய ஒருமைபாட்டுடன் தொடர்புடைய இத்தகைய பிரச்சனைகளில் அரசாங்கம் அமைதி காப்பதாக பட்டராய் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read: PLFI நக்சல்களுடன் தொடர்பு.. டெல்லியில் வங்கதேச பெண்ணை கைது செய்த போலிஸ்..

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைப்படத்தில் லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவை இந்திய பகுதியாக காட்டியுள்ளதாக கூறி நேபாளம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பதிலுக்கு அந்த பகுதிகளை தன்னுடன் இணைத்து நேபாளமும் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நேபாளம் கூறப்பட்ட நிலையில், இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *