வீட்டீலேயே இயற்கை மருத்துவம்! கணவனின் அலட்சியத்தால் தாயும் சேயும் உயிரிழந்த கொடுமை

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள், BSc நர்சிங் முடித்துள்ளார். அவருக்கும் விஜயவர்மன் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணமாகி உள்ளது. . கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார்.

விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனால் வீட்டிலேயே இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்து கொள்ளலாம் என கணவன் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனை நம்பி அழகம்மாளும் ஒப்பு கொண்டுள்ளார். இதனை அறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் கடந்த ஜூன் மாதம் அழகம்மாள் வீட்டுக்கு சென்று மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு கணவன் விஜயவர்மன் மறுத்துவிட்டார். தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை முறைப்படி பிரசவம் பார்க்க போவதாகவும், மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் அதனால் தங்களுக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறையினருக்கு எழுதிய கடிதத்தில் தனது மனைவிக்கோ, குழந்தைக்கோ ஏதேனும் பின்விளைவுகளோ அல்லது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ பொறுப்பில்லை என கடிதம் அனுப்பியுள்ளார்.

நவம்பர் மாதமும் அழகம்மாளை பரிசோதனைக்கு சுகாதாரதுறையினர் அழைத்துள்ளனர். அவர்கள் வராததால், இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் அழகம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. குழந்தை பாதி பிரசவித்த நிலையில் அழகம்மாளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு குழந்தை அழுகிய நிலையில் அழகம்மாள் வயிற்றில் இருந்து சடலமாக வெளியே எடுக்கப்பட்டது. மேலும் ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயும், சேயும் உயிரிழந்தது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை மருத்துவம் பார்ப்பதாக கூறிய கணவனின் அலட்சியத்தால் தான் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அரும்பாவூர் போலீசார், விஜயவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *