இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வாங்க உள்ள மியான்மர்..?

இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை மியான்மர் வாங்க உள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையானது இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்தியா பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்தியா தற்போது 3 டஜன் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

மியான்மர் தனது கடற்படையில் ஏற்கனவே ஐந்து வகையான கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டுள்ளது. அவற்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட C-801, C-802, C-802A, HY-2 மற்றும் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட KH-35U ஆகிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க மியான்மர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சமீபத்தில் பிரம்மோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்கியது. இந்தியா பிலிப்பைன்ஸ் உடன் சுமார் 375 டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு வழங்கப்படும். மேலும் இந்தோனேசியாவும் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சி மாநாட்டின் போது, இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்தோனேசியா விரும்பம் தெரிவித்து இருந்தது. பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் பட்சத்தில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் இரண்டாவது ஆசியான் நாடு இந்தோனேசியாவாக இருக்கும்.

இதேபோல் மலேசியாவும் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. தற்போது மலேசியா இலகுரக போர் விமானங்களை வாங்க விமானங்களை தேர்வு செய்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் தேஜஸ் விமானமும் இடம்பெற்றுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையானது நிலம், கடல், வான் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரம்மோஸ் விமானத்தில் சூப்பர்சோனிக் வேகத்தில் 290 கிலோமீட்டர் தூரம் வரை இலக்கை தாக்கி அழிக்க கூடியது. இந்திய விமானப்படை தனது சுகோய்-30 போர் விமானத்தில் பிரம்மோஸ் ஏவுகணையை இணைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.