பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொலை செய்த இளம்பெண் விடுதலை! தற்காப்புக்காக நடந்த கொலை என காவல்துறை அறிவிப்பு
திருவள்ளூரில் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண் கௌதமி. தாய் தந்தையை இழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற கவுதமியை பின்தொடர்ந்து சென்ற உறவினர் அஜீத்குமார் என்பவர், கத்திமுனையில் கௌதமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
கௌதமி தனது உயிரை காப்பாற்றி கொள்ள, அவர் வைத்திருந்த கத்தியை பறித்து போதையில் இருந்த அஜீத்தை குத்தி கொலை செய்துள்ளார்.
கொலை செய்த கத்தியுடன் சோழாவரம் காவல்நிலையத்தில் சரணடைந்த கௌதமி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரிடம் இருந்து தற்காத்து கொள்ள அஜீத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி கத்தியை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இது தற்காப்புக்காக இளம் பெண்ணால் நிகழ்த்தப்பட்ட கொலை என்பதால் இதனை கொலையாக எடுத்துக்கொள்ள முடியாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார், மேலும் கவுதமியை கைது செய்யவில்லை என கூறினார்.
மேலும் முதலில் கொலை வழக்காக 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அதனை மாற்றி தற்காப்புக்காக நடந்த கொலை என 100 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
இளம்பெண் விடுதலை செய்யப்படுவார் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றது..!