இந்தியாவின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் கணிப்பு..!
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் கொரோனா முதல் அலை மற்றும் 2021 ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலையில் எதிர்பார்த்ததை விட விரைவாக மீண்டு வந்ததால் கணிப்பை மூடிஸ் அதிகரித்துள்ளது.
மேலும் 2022-23 ஆம் ஆண்டில் 8.4 சதவீதம் மற்றும் 2023-24 ஆம் ஆண்டு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு நவம்பரில் மூடிஸ் கணித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தற்போது கொரோனா அலை குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மேலும் பெரும்பாலாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாக மூடிஸ் கூறியுள்ளது.
2022 யூனியன் பட்ஜெட் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. 2022-23 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதம் மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தனியார் முதலீட்டை அதிக அளவில் கொண்டுவரும் என மூடிஸ் கணித்துள்ளது. பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் விட்டதால் பணவியல் கொள்கை ஆதராகவே உள்ளதாக கூறியுள்ளது.
தற்போது உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் மற்ற நாடுகள் ரஷ்யா மீது என்ன மாதிரியான தடைகள் விதிக்கப்படுகிறது என்பதை பொறுத்து உலக அளவில் மாற்றம் ஏற்படலாம் என கூறியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உடனான சீனாவின் உறவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசமடைந்துள்ளதால் சீனாவின் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக மூடிஸ் கூறியுள்ளது.